உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்றைய புதுச்சேரி சட்டசபை கட்டடம் பிரெஞ்சு காலத்தில் மருத்துவ கல்லுாரி

இன்றைய புதுச்சேரி சட்டசபை கட்டடம் பிரெஞ்சு காலத்தில் மருத்துவ கல்லுாரி

இன்று அரசு மருத்துவ கல்லுாரி என்றால், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியை தான் குறிக்கும். ஆனால், பிரெஞ்சு காலத்தில் மருத்துவ கல்லுாரி என்றால், அது புதுச்சேரி சட்டசபை வளாகம் உள்ள கட்டடத்தை தான் குறிக்கும்.மொத்தம் 87,120 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள, இக்கட்டடம், பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில், 1820ல் துவங்கி, 1830ல் கட்டி முடிக்கப்பட்டது. வெளிப்படையான பிரமாண்டமான துாண்கள், கிராண்ட் பியர்டு கேட், அலங்கார அரை வட்ட வளைவு சாளரம், தட்டையான வளைவு கதவு, எளிய வளைந்த கார்னிஸ், ப்ளைன் பைலாஸ்டர் கொண்டுள்ளது சட்டசபை கட்டடத்தின் சிறப்பு அம்சம்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மருக்கான விதையும் இங்கு இருந்து தான் விழுந்தது. 1863ல் துவங்கப்பட்ட பிரெஞ்சு மருத்துவ பள்ளி புதுச்சேரி இணைப்பிற்கு பிறகு 1959ல் திடீரென மூடப்பட்டது. புதுச்சேரி விடுதலைக்கு பிறகு 1956ல் பிரெஞ்சிந்திய மருத்துவ பள்ளிக்கு மாற்றாக தன்வந்திரி மருத்துவ கல்லுாரி துவங்கப்பட்டது. அதன் பின், பாண்டிச்சேரி மெடிக்கல் கல்லுாரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இந்த மருத்துவ கல்லுாரி சட்டசபை வளாகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த கல்லுாரியின் முதல் முதல்வராக லப்பெசிசோனி நியமிக்கப்பட்டார். பல புதிய மருத்துவ பிரிவுகளும் துவங்கப்பட்டு நடந்து வந்தது. இந்த பாண்டிச்சேரி மெடிக்கல் கல்லுாரி, மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு ஆதரவினால் உயர் மருத்துவ ஆய்வு கல்லுாரியாக மாற்றப்பட்டது. அக்கல்லுாரிக்காக 14.03.1959ல் கோரிமேட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வந்தது.எனவே, 1961ல் அக்கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களுக்கு இன்றைய சட்டசபை வளாகத்திலும், கோரிமேட்டிலும் வகுப்புகள் நடந்து வந்தன. அக்கல்லுாரி தான், 1964ல் ஜூலை 13ம் தேதி ஜிப்மர் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டு இன்றைக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.கடந்த 1963ம் ஆண்டுக்கு பிறகு தான் மருத்துவ கல்லுாரி வளாகம் சட்டசபை வளாகமாக மாற்றப்பட்டது. மருத்துவ கல்லுாரிக்கு முன் தொடக்க நிலை நீதிமன்றமாகவும், அதற்கு முன்னர் பெர்னோன் என்பவருக்கு சொந்தமான வீடாகவும் செயல்பட்டு வந்துள்ளது.புதுச்சேரியில் உள்ள பாரம்பரிய கட்டடங்களில் ஒன்றாக உள்ள சட்டசபை கட்டடம், தற்போது 400 கோடி ரூபாய்க்கு மேல் புதிய கட்டடத்தை தேடிக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ