உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு பதிவுகளை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்

எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு பதிவுகளை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்

புதுச்சேரி: சென்டாக் எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் பதிவு செய்வதற்கும், விருப்பப் பாடங்களைச் சமர்ப்பிப்பதற்கும், முதல் சுற்றில் சேர்க்கை பெற்ற இடங்களைத் திரும்பப் பெறுவதற்கும் நாளை 30ம் தேதி மாலை 5:00 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவப் படிப்புகளில் புதிதாக அனுமதிக்கப்பட்ட கூடுதல் இடங்களுக்கான சீட் மேட்ரிக்ஸ் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியிடப்பட்டுள்ள இரு சீட் மேட்ரிக்ஸ்களையும் கருத்தில் கொண்டு தங்களின் விருப்பப் பாடங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வின் போது ஸ்லைடிங் வசதி உள்ளதால், இடஒதுக்கீட்டின் போது எந்தப் பாடத்திலும் காலியிடங்கள் மாறுபட வாய்ப்புள்ளது. எனவே, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள காலியிடங்களை மட்டும் பார்க்காமல், தங்களுக்கு விருப்பமான அனைத்துப் பாடங்களுக்கும் முன்னுரிமை அளிக்கலாம். சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் தொடர் உத்தரவின் அடிப்படையில், வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை மருத்துவ இடங்கள் 2-ம் சுற்றுக் கலந்தாய்வு இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது மாணவர்களின் லாகின் டாஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் மூலமாகவோ, 0413-2655570, 2655571 என்ற உதவி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !