உப்பளம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருளில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணி மற்றும் எரியாத மின் விளக்குகளால் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். உப்பளம் அம்பேத்கர் சாலையில் கடந்த சில நாட்களாகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனை, பொதுப்பணித்துறையினர் கான்கிரீட் போட்டு சீர் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கான்கிரீட் கலவை காய்வதற்காகச் சாலையின் குறுக்கே பேரிகார்டு வைக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால், பிரதான சாலையின் அகலம் பாதியாக குறைந்தது. அப்பகுதி வழியாக வந்த பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் குறுகிய பாதையை கடக்க முடியாமல் அணிவகுத்து நின்றன. குறிப்பாக, அந்தச் சாலையில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஒருபுறம் சாலை சுருங்கியது, மறுபுறம் போதிய வெளிச்சம் இல்லாதது என இரு காரணங்களால் நிலைமை மோசமானது. இதனால் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.