| ADDED : நவ 21, 2025 05:54 AM
புதுச்சேரி: இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகம் மற்றும் புதுச்சேரி அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இணைந்து, 'ஆதாரின் அதிகபட்ச பயன்பாடு பெறுதல்' என்ற தலைப்பில், பயிற்சி பட்டறையை நடத்தின. புதுச்சேரி ஓட்டல் அக்கார்டில் நடந்த பயிற்சி பட்டறையில், தலைமை செயலர் சரத் சவுகான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், 'புதுச்சேரியில் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் முதல் தனித்துவமான ஆதார் சேவா கேந்த்ரா -2026 மார்ச் மாதத்திற்குள் நிறுவப்படும். புதுச்சேரி ஆதார் செயல்பாட்டில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆதார் இணைப்பு 97 சதவீதமாக உள்ளதால் பல நலத் திட்டங்களில் பயனாளி அடையாளம் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் 137 நிதி உதவி திட்டங்கள் பரத் போர்டலில் இணைக்கப்பட்டுள்ளது' என்றார். இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பூவனேஷ் குமார் பேசுகையில்' 'ஆதார் நிர்வாகத்தில் புதுச்சேரி உயர்ந்த தரத்தை கடைப்பிடிப்பதையும், மாநிலத்தின் தரவு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஒழுங்கையும் பாராட்டினார். மேலும், ஆதார் செயலி மூலம் ஆப்லைன் சரிபார்ப்பு, இறந்தவர்களின் ஆதார் செயலிழக்கம், கட்டாய உயிர் விவரப் புதுப்பிப்பு, புதிய ஆதார் விண்ணப்பங்களில் சரிபார்ப்பு, 100 வயது கடந்தவர்களுக்கு ஆதார் வழங்கல், முக அடையாள அங்கீகாரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களின் நிபுணர்கள், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தலைமையக அதிகாரிகள் ஆதார் நிர்வாகத்தில் தங்கள் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, 100 வயதிற்குமேல் உள்ள மூத்த குடிமக்களாகிய 3 பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.