தனியார் ஹோட்டலில் பயன்படுத்திய வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பறிமுதல்
புதுச்சேரி: கூடப்பாக்கத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டலில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதட்டம் காரணமாக வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி ஹோட்டல்களில் உணவுகள், டீ, காபி உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், பல ஹோட்டல்கள் மின்சாரம் மற்றும் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றன. இருப்பினும், சில ஹோட்டல்களில் சட்ட விரோதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, கூடப்பாக்கம், பத்துக்கண்ணு மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக வணிக சிலிண்டருக்கு பதிலாக, அங்கு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. தொடர்ந்து, சிலிண்டரை பறிமுதல் செய்த போலீசார், ஹோட்டல் உரிமையாளர் செந்தில்குமார், 29; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.