கால்நடை மருத்துவக்கல்லுாரி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
புதுச்சேரி: ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குருமாம்பேட்டில் ராஜிவ்காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தினசரி 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சை பெற்று வருகின்றன.மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து, புதுச்சேரி அரசு தன்னாட்சி கல்லுாரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் கந்தவேலு தலைமையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து கடந்த 7 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் கால்நடைகள் மிகவும் பாதிக்கப்பட்டு இறக்கும் சூழல் நிலவி வருகிறது. ஆகையால், ஊழியர்கள் சம்பள பிரச்னையில் கவர்னர் உடனடியாக தலையிட்டு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கால்நடை வளர்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.