வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி, : மாநில அளவில் நடந்த ஜூனியர் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்.பாண்டிச்சேரி வாலிபால் சங்கம் மற்றும் ஒதியம்பட்டு காந்தி விளையாட்டு மன்றம் இணைந்து மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான வாலிபால் போட்டியை மூன்று நாட்கள் நடத்தின.ஆண்கள் பிரிவில் 30 அணிகள், பெண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் முத்தியால்பேட்டை ஜாலி பிரதர்ஸ் அணி, ஒதியம்பட்டு காந்தி வாலிபால் அணி, வீனஸ் வாலிபால் அணி, சிவந்தி வாலிபால் அணி மற்றும் பெண்கள் பிரிவில் முத்தியால்பேட்டை வாசுதேவன் அணி, சூரியமூர்த்தி அணி, காந்தி வாலிபால் அணி , சிவந்தி வாலிபால் அணி ஆகியன முதல் நான்கு இடங்களை பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா காந்தி கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சம்பத், பாண்டிச்சேரி வாலிபால் சங்கத் தலைவர் சுந்தரராசு, செயலாளர் ராமதாஸ், இணைச் செயலாளர் முருகையன், இந்தியன் கைப்பந்து பயிற்சியாளர் வேணுகோபால், சர்வதேச நடுவர் சுகுமாரன், ஒதியம் பட்டு காந்தி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் திருவேங்கடம், செயலாளர் அரிகிருஷ்ணன், செல்வராசு உட்பட பலர் பங்கேற்றனர்.