சென்னை: தனிக்கட்சி துவங்கியது முதல் நடிகர் விஜயை, 'தம்பி, தம்பி' என பாராட்டி வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென அவருக்கு எதிராக திரும்பியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய், அக்டோபர் 28ல் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி, அதில் தன்னுடைய கட்சியின் கொள்கையை அறிவித்தார். 'திராவிடமும், தமிழ் தேசியமும்' கட்சியின் இரு கண்களாகக் கொண்டு செயல்படுவோம் என கூறினார். கட்சி துவங்குவதாக அறிவித்தது முதல், 'தம்பி, தம்பி' என விஜயை பாராட்டி வந்த சீமான், விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பின், அவரை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த, 'தமிழ்நாடு தினம்' பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், 'தன் கட்சி மாநாட்டின் வாயிலாக விஜய் அறிவித்திருப்பது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் இடது ஓரத்தில் அல்லது வலது ஓரத்தில் நிற்க வேண்டும். நடுவில் நின்றால், லாரி மோதி விடும். அதில் அடிபட்டுத்தான் சாக வேண்டும். நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல. வரலாற்றை கற்பிக்க வந்தவன். யார் எங்கள் கொள்கைக்கு எதிராக நின்றாலும், எதிர்ப்போம்' என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.விக்கிரவாண்டி மாநாட்டிற்கு கூடிய கூட்டம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நடிகர் சீமானுக்கு இதுவரை சென்று கொண்டிருந்த பெரும்பாலான இளைஞர் ஓட்டுகள், வருங்காலத்தில் நடிகர் விஜய்க்கு போக வாய்ப்புள்ளது. இதனால், கடந்த தேர்தல் வாயிலாக 8 சதவீத ஓட்டுகளைப் பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர், இனி அந்தளவுக்கு ஓட்டுகளை வாங்க முடியாது. இதனால் தனக்குத்தான் பாதிப்பு என உணர்ந்திருக்கும் சீமான், ஆற்றாமையில் பொறுக்க முடியாமல் தவிப்பதாக தெரிகிறது. அதனாலேயே நடிகர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளார் என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதும்கூட, விஜய்யை கடும் வார்த்தைகளில் தாக்கினார் சீமான்.பேட்டியில் சீமான் கூறியிருப்பதாவது: திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் கூறியிருக்கிறார். விஷமும், விஷத்தை முறிக்கிற மருந்தும் ஒன்றாக இருக்க முடியாது. விஜய் முதலில் கொள்கையை மாற்ற வேண்டும் அல்லது எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும். கூட்டம் கூடுவதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. சேலத்தில் நகைக்கடை திறக்க வந்த நயன்தாராவுக்கு நான்கு லட்சம் பேர் கூடினர். விஜயகாந்திற்கு மதுரையில் கூடாத கூட்டமா, விஜய்க்கு கூடி விட்டது? எனக்கு 36 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். அந்த 36 லட்சம் பேரும் என் கூட்டம். இதை என்னால் அடித்துக் கூற முடியும். ஆனால், மாநாட்டுக்கு வந்தோரெல்லாம் என் ஆதரவாளர்கள், ரசிகர்கள் என விஜய்யால் கூற முடியுமா?இவ்வாறு அவர் விஜய்யை சீண்டியுள்ளார்.
திருமா செய்ய மாட்டார்'
வி.சி., துணைப் பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவனும், விஜய்யும் பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த சீமான், ''திருமாவளவன் என்னைவிட அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள் நாங்கள். எனவே, விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கும் தவறை செய்ய மாட்டார் என நினைக்கிறேன்,'' என்றார் சீமான்.நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி வைக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் மீதான சீமானின் கடும் விமர்சனம், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.