உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விவகாரம் முடங்கி கிடப்பது ஏனோ?

 போலி மருந்து விவகாரம் முடங்கி கிடப்பது ஏனோ?

மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், கடந்தாண்டு உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் நடத்திய சோதனையில், புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்து தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்த விவகாரத்தில், நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அதில், பிரதான குற்றவாளியான புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன்,42; என்பவர் உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சிக்கிய நபர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கவர்னரின் பரிந்துரையை ஏற்று இவ்வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர். கடந்த மார்ச் மாதம், டில்லி சன்பார்மா மற்றும் சென்னை குரோம்பேட்டை லுாபின் நிறுவனங்கள் அளித்த புகார்களின் பேரில், அனில்குமார் தலைமையிலான சி.பி.ஐ., குழுவினர் இரு வழக்குகள் பதிவு செய்தனர். இதனால், வழக்கு சூடு பிடிக்கும். முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ கடந்த மூன்று மாதங்களாக இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், கிணற்றில் போட்ட கல் போன்றாகி விட்டது. இந்நிலையில், இந்த போலி மருந்து வழக்கை முடக்க சி.பி.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தான் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில், ஏற்கனவே ஜாமினில் வந்த ராஜா, டில்லியை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பிரதான வழக்கு எந்த நடவடிக்கையும் இல்லாமல், முடங்கி கிடப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை