உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.ஐ., சீட் விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்குமா?:புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்

என்.ஆர்.ஐ., சீட் விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்குமா?:புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்

புதுச்சேரி: என்.ஆர்.ஐ., சீட்டுகளை கை கழுவிவிட்டு, புதுச்சேரி மாணவர்களுக்கேஅரசு ஒதுக்க கொள்கை முடிவெடுக்க வேண்டும்.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மருத்துவ கல்வி பயில மொத்த இடங்களில், 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டை ஆண்டு தோறும் குறுக்கு வழியில் போலி சான்றிதழ் அளித்து முறைகேடாக அபகரிக்க முயற்சி நடந்து வருகிறது.இந்தாண்டு அரசு மருத்துவக் கல்லுாாரியில் 22 இடங்கள், மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் 116 இடங்கள் என்.ஆர்.ஐ., இடங்களாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 75 மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்ததாக சீட் மறுக்கப்பட்ட நிலையில், இம்மாணவர்கள் மீது லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்து 5 இடைத்தரர்கள் கைது செய்யப்பட்டனர்.என்.ஆர்.ஐ., சீட் மோசடி விவகாரத்தில் பெரும்பாலும் என்.ஆர்.ஐ., பரிந்துரை சீட் செய்யப்படுவதில் தான் மோசடி நடக்கிறது. என்.ஆர்.ஐ., உறவினர்கள் போன்று பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்கின்றனர். ஆனால் அந்த சான்றிதழ்களை வெளியுறவு துறை அமைச்சகம், துாதரகங்கள் மூலமாக முன் கூட்டியே சரி பார்ப்பதற்கான கட்டமைப்பு இல்லை.இதன் காரணமாக என்.ஆர்.ஐ., சீட்டினை கொடுத்து விட்டு, புகார்கள் எழுந்த பிறகு கடைசி நேரத்தில், சுதாரிக்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் சென்டாக், அரசும் முன் கூட்டியே நடவடிக்கை எடுத்தால் மட்டுமே என்.ஆர்.ஐ., சீட்டுகள் பறிபோவதையும், மோசடியும் தடுக்க முடியும்.

வழிகாட்டும் தீர்ப்பு:

பஞ்சாப் மாநில மருத்துவக்கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில், என்.ஆர்.ஐ.,களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, அம்மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக இந்த கோரிக்கையை மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்தது.கோரிக்கை மனுவில், என்.ஆர்.ஐ.,களின் துாரத்து உறவினர்களுக்கு, மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீதம் ஓதுக்கீடு வேண்டும் என, குறிப்பிட்டிருந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், என்.ஆர்.ஐ.,களுக்கு இட ஒதுக்கீடு செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.இது வரவேற்க வேண்டிய முக்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது. எனவே, புதுச்சேரியில் ஆண்டுதோறும் என்.ஆர்.ஐ., மோசடி விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், என்.ஆர்.ஐ., சீட்டுகள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு முக்கிய கொள்கை முடிவெடுக்க வேண்டும்.அரசு மருத்துவ கல்லுாரியில் என்.ஆர்.ஐ., சீட்டுகளை அரசு கைகழுவிவிட்டு, புதுச்சேரி மாணவர்களுக்கே அரசு ஒதுக்க கொள்கை முடிவெடுக்க வேண்டும். ஜிப்மரில் என்.ஆர்.ஐ., சீட்டினை ஜிப்மர் நிர்வாகம் கைகழுவிட்டது. மெரீட் அடிப்படையில் அந்த இடங்களை நிரப்புகிறது. இதேபோல் பல மாநிலங்கள் என்.ஆர்.ஐ., சீட்டினை கைகழுவிட்டு, அந்த ஊர் மாணவர்களுக்கே சீட் தருகின்றன. எனவே புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் 22 என்.ஆர்.ஐ., உள்ளன. இதன் மூலம் 20 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு இது பெரிய தொகை இல்லை. எனவே அரசு மருத்துவ கல்லுாரி என்.ஆர்.ஐ., சீட்டுகளை முழுவதுமாக புதுச்சேரி மாணவர்களுக்கு மெரீட் அடிப்படையில் ஒதுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !