உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் பைபாசில் பேனர் வைத்து அட்டூழியம் உறக்கத்தை கலைக்குமா தேசிய நெடுஞ்சாலை துறை

வில்லியனுார் பைபாசில் பேனர் வைத்து அட்டூழியம் உறக்கத்தை கலைக்குமா தேசிய நெடுஞ்சாலை துறை

வில்லியனுார்: வில்லியனுார் பைபாஸ் சாலையில் விதவிதமான பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்துகள் ஏற்பட்டு வருவதை தடுக்க உறக்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர் கண் விழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள போதிலும், அதனை எந்த அரசியல் கட்சியினரும் மதிப்பதில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி முதல் லெட்டர் பேட் கட்சியினர் வரை போட்டி போட்டுக் கொண்டு விதவிதமாக பேனர் வைப்பதில் குறியாக உள்ளனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக தற்போது, கவர்னருக்கும் பேனர் வைக்க துவங்கிவிட்டனர்.வில்லியனுாரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. வில்லியனுார் பைபாஸ் சாலை அமைந்ததால் எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் விசாலமான இடவசதி ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அரசியல் கட்சியினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு சாலையில் பள்ளம் தோண்டி உயரமான பேனர்கள் வைத்து வருகின்றனர்.இதனால் வாகன ஓட்டிகள் எம்.ஜி.ஆர் சிலை நான்கு ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை பார்த்துக்கொண்டே சாலையில் வாகனங்கள் வருவதை கவனிக்காமல் விபத்துகளில் சிக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அதேபோன்று பைபாஸ் கூடப்பாக்கம் சிக்னல் மற்றும் கண்ணகி பள்ளி ரவுண்டான பகுதியை சுற்றி திருமணம், பிறந்தநாள் வாழ்த்து, நினைவு நாள், மரண அறிவிப்பு பேனர்கள் மாதக்கணக்கில் அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர்.வில்லியனுார் நகர பகுதி சாலையில் பேனர் வைத்தால், அதனை பொதுப்பணித்துறையினர் அகற்றுகின்றனர். மீறி வைப்போர் மீது போலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.இதனால், தற்போது, அரசியல்வாதிகள் மற்றும் விழா நடத்துபவர்கள் பைபாஸ் சாலையில் பேனர் வைக்க துவங்கியுள்ளனர். இதனை தடுக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை துறையினர் உறக்கத்தில் உள்ளதால், பைபாஸ் சாலை ரவுண்டான பகுதி மற்றும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் தொடர்ந்து பேனர் வைத்து வருகின்றனர்.உறக்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர் இனியேனும் துாக்கத்தை கலைத்து, பேனர் வைப்போர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முன் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை