மக்கள் நலத் திட்டம் குறித்த பயிலரங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 19 முதல் வரும் 25ம் தேதி வரை 'நல்லாட்சி வாரம்' கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் நல திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற ஒரு பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கினை, கூடுதல் கலெக்டர் சுதாகர் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் கலெக்டர் வல்லவன் கலந்து கொண்டுமத்திய மாநில அரசின் திட்டங்கள் குறித்து கருத்துரையாற்றினார். மேலும்,மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கொண்டு சேருவதற்கு அரசு அதிகாரிகளின் பங்கு மிகவும் அவசியமானது என்றும், ஒரு திட்டம் நிறைவேற்றும் பொழுது அது எவ்வாறு மக்களை சென்றடைகிறது. மக்கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பது குறித்து அதிகாரிகள் குறித்த நேரத்தில் ஆராய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள். இதில், சப் கலெக்டர் சிவசங்கரன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.