உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஷஸ்: ஜோ ரூட் சதம்: மீண்டது இங்கிலாந்து

ஆஷஸ்: ஜோ ரூட் சதம்: மீண்டது இங்கிலாந்து

பிரிஸ்பேன்: பகலிரவு டெஸ்டில் ஜோ ரூட் சதம் விளாச, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் ('காபா') 2வது டெஸ்ட் (பகலிரவு) நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.ஸ்டார்க் அசத்தல்: இங்கிலாந்து அணிக்கு மிட்செல் ஸ்டார்க் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' பென் டக்கெட் (0), போப் (0) வெளியேறினர். பின் இணைந்த ஜாக் கிராலே, ஜோ ரூட் ஜோடி கைகொடுத்தது. கிராலே, டெஸ்ட் அரங்கில் தனது 20வது அரைசதம் அடித்தார். கிராலே, 76 ரன்னில் அவுட்டாடானார். ஸ்டார்க் பந்தில் ஹாரி புரூக் (31) ஆட்டமிழந்தார்.ரூட் அபாரம்: கேப்டன் ஸ்டோக்ஸ் (19), ஜேமி ஸ்மித் (0) சோபிக்கவில்லை. போலந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரூட், டெஸ்ட் அரங்கில் தனது 40வது சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் (19), அட்கின்சன் (4), பிரைடன் கார்ஸ் (0), ஸ்டார்க் பந்தில் சரணடைந்தனர். இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 264 ரன் மட்டும் எடுத்து தடுமாறியது. பின் இணைந்த ரூட், ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி, அணியை மீட்டது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325/9 ரன் எடுத்திருந்தது. ரூட் (135), ஆர்ச்சர் (32) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட் கைப்பற்றினார்.முதன்முறைபேட்டிங்கில் அசத்திய இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன், 2021ல் நடந்த பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன் எடுத்திருந்தார்.* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார் ஜோ ரூட். இதுவரை 160 டெஸ்டில், 13,686 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (15,921 ரன்) உள்ளார்.40வது சதம்டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறார் இங்கிலாந்தின் ஜோ ரூட். இதுவரை 160 டெஸ்டில், 40 சதம் பதிவு செய்துள்ளார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் சச்சின் (51 சதம்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (45), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41) உள்ளனர்.415 விக்கெட்இங்கிலாந்தின் ஹாரி புரூக்கை அவுட்டாக்கிய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வாசிம் அக்ரமை (பாக்., 414 விக்கெட், 104 டெஸ்ட்) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை 102 டெஸ்டில், 418 விக்கெட் கைப்பற்றி உள்ளார் ஸ்டார்க்.சூப்பர் ஜோடிஇங்கிலாந்தின் ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி, 10வது விக்கெட்டுக்கு 61 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளது. இது, பகலிரவு டெஸ்டில் 10வது விக்கெட்டுக்கு பதிவான அதிகபட்ச ரன் ஆனது. இதற்கு முன் 2023ல் நியூசிலாந்தின் பிளன்டெல், டிக்னர் ஜோடி 59 ரன் சேர்த்திருந்தது.ஹைடன் 'எஸ்கேப்'ஆஷஸ் தொடருக்கு முன், 'இம்முறை ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும், ஒருவேளை சதமடிக்காவிட்டால், மெல்போர்ன் மைதானத்தை நிர்வாணமாக வலம் வருவதாக', முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹைடன் தெரிவித்திருந்தார். பெர்த் டெஸ்டில் ஏமாற்றிய ரூட், பிரிஸ்பேனில் சதம் கடந்து ஹைடனின் மானத்தை காப்பாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ