உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அஷ்வின் 14 ஆண்டு பயணம்: விராத் கோலி நெகிழ்ச்சி

அஷ்வின் 14 ஆண்டு பயணம்: விராத் கோலி நெகிழ்ச்சி

பிரிஸ்பேன்: ''அஷ்வினுடன் 14 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன். திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்த போது உணர்ச்சிவசப்பட்டேன்,'' என விராத் கோலி தெரிவித்தார்.இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 38. கடந்த 2010ல் அறிமுகமானார். தமிழகத்தில் இருந்து புறப்பட்ட 'சுழல்' புயலான இவர், மூன்றுவித கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்தார். சமீப காலமாக புறக்கணிக்கப்பட்டார். அதிலும் அன்னிய மண்ணில் நடக்கும் போட்டிகளில் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்தனர். அஷ்வினை நிராகரித்தனர். பின் ரோகித் சர்மா வலியுறுத்தியதால், அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இடம் பெற்றார். அடுத்து பிரிஸ்பேன் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெற, அஷ்வின் விரக்தி அடைந்தார். விளையாடும் 'லெவனில்' இடம் பெறாமல் 'பெஞ்ச்சில்' உட்கார பிடிக்கவில்லை. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கும் போது அஷ்வினுக்கு 40 வயதாகிவிடும். இந்தச்சூழலில் நேற்று, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவரது ஓய்வால் இந்திய சுழற்பந்துவீச்சு துறையில் பெரும் வெற்றிடம் ஏற்படும்.அஷ்வின் குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது:ரோகித் சர்மா: பெர்த்தில் என்னை சந்தித்தார் அஷ்வின். அப்போது அவரது தேவை அணிக்கு அவசியம் இல்லாத பட்சத்தில், கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதே சிறந்தது என கூறினார். பின் அவரை சமாதானம் செய்து அடிலெய்டு டெஸ்டில் பங்கேற்க சொன்னேன். இந்திய அணியின் 'மேட்ச் வின்னராக' ஜொலித்தார். ஓய்வு முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு உண்டு.விராத் கோலி: நேற்று என்னிடம் தான் ஓய்வு பெறும் முடிவை முதலில் சொன்னார். அவரை கட்டி அணைத்து கொண்டேன். 14 ஆண்டுகள் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். அஷ்வின் முடிவை கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டேன். களத்தில் விளையாடிய பழைய நினைவுகள் என் கண் முன்னே வந்து சென்றன.ஹர்பஜன்: டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அசத்தலாக செயல்பட்டார் அஷ்வின். அவரது சாதனைகளை நினைத்து பெருமைப்படலாம்.தினேஷ் கார்த்திக்: அனைத்து காலத்துக்கும் சிறந்த 'கோட்' வீரராக திகழ்கிறார் அஷ்வின். தமிழகத்தில் இருந்து பிரகாசித்த வீரர். அவருடன் சேர்ந்து விளையாடியது பெருமையான விஷயம்.கவாஸ்கர் கோபம்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி (2014-15) ஓய்வை அறிவித்தார். இதே பாணியை அஷ்வினும் பின்பற்றியிருக்கிறார். தொடர் முடிந்த பின் ஓய்வை அறிவித்திருக்கலாம். தேர்வாளர்கள் குறிக்கோளுடன் அணியை தேர்வு செய்கின்றனர். காயம் ஏற்பட்டால் மாற்று வீரரை தேர்வு செய்யலாம். ஒருவர், தொடரின் பாதியில் விடைபெறுவது சரியல்ல. 5வது டெஸ்ட் நடக்க உள்ள சிட்னி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். இந்திய அணியில் இரண்டு 'ஸ்பின்னர்கள்' விளையாடலாம். அப்போது அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அஷ்வின் உடனடியாக இந்தியா திரும்புவதாக ரோகித் சொன்னார். இதனால் இவரது சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துவிட்டது,''என்றார்.கேப்டன் பதவிசர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த அஷ்வினுக்கு இதுவரை கேப்டன் பதவி வழங்கப்படவில்லை. விராத் கோலி, கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது அஷ்வினுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணியை வழிநடத்தினர். ஆனால் சீனியர் வீரரான அஷ்வினுக்கு ஒருமுறை கூட கேப்டன் வாய்ப்பு வழங்காதது ஏமாற்றம் அளித்திருக்கும்.இதேபோல ஆஸ்திரேலிய 'சுழல் ஜாம்பவான்' ஷேன் வார்ன், ஒரு போட்டியில் கூட கேப்டனாக இருந்ததில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை