இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட் சதம்
நாட்டிங்காம்: முதல் ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (95), வில் ஜாக்ஸ் (62) கைகொடுத்தனர். கேப்டன் ஹாரி புரூக் (39), ஜேக்கப் பெத்தேல் (35) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து அணி 49.4 ஓவரில் 315 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா, மார்னஸ் லபுசேன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.ஹெட் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (10) ஏமாற்றினார். ஸ்டீவ் ஸ்மித் (32), கிரீன் (32) ஓரளவு கைகொடுத்தனர். பின் இணைந்த டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசேன் ஜோடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். அபாரமாக ஆடிய ஹெட், 92 பந்தில் சதத்தை எட்டினார். மறுமுனையில் அசத்திய லபுசேன், 42 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.வில் ஜாக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லபுசேன் வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹெட் (154* ரன், 5 சிக்சர், 20 பவுண்டரி), லபுசேன் (77 ரன், 2 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஹெட் வென்றார். 13வது வெற்றிஇங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, ஒருநாள் போட்டி அரங்கில் வரிசையாக 13வது வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், தொடர்ச்சியாக 21 வெற்றியை (2003, ஜனவரி-மே) பதிவு செய்திருந்தது.154 ரன்இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் டிராவிஸ் ஹெட் (154). முதலிடத்தில் வாட்சன் (161* ரன், 2011, இடம்: மெல்போர்ன்) உள்ளார்.