ஆஸ்திரேலிய டி-20 அணி அறிவிப்பு: டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு
சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் 'ரெகுலர்' டெஸ்ட் வீரர்களுக்கு 'ரெஸ்ட்' வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி, மூன்று ஒருநாள் (நவ. 4, 8, 10), மூன்று 'டி-20' (நவ. 14, 16, 18) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் 'டி-20' தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.'டி-20' தொடர் முடிந்த அடுத்த நான்கு நாட்களில் இந்தியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் (நவ. 22 - 2025, ஜன. 7) ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இதனையடுத்து டெஸ்டில் பங்கேற்கும் மிட்சல் மார்ஷ், பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, மாத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ், ஸ்டாய்னிஸ் உள்ளிட்டோர் 'டி-20' தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர்களான சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், 'டி-20' அணிக்கு திரும்பினர். இத்தொடருக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.ஆஸி., அணி: மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஆடம் ஜாம்பா, மாத்யூ ஷார்ட், ஜாக் பிரேசர்-மெக்குர்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆரோன் ஹார்டி, கூப்பர் கோனோலி, ஜோஷ் இங்லிஸ், சீன் அபாட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன்.