பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: கேப்டன் மந்தனா அரைசதம்
வதோதரா: பிரிமியர் லீக் போட்டியில் கேப்டன் மந்தனா அரைசதம் கடந்து கைகொடுக்க, பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில், பெண்கள் பிரிமியர் லீக் 3வது சீசன் நடக்கிறது. வதோதராவில் நடந்த லீக் போட்டியில் டில்லி, 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.டில்லி அணிக்கு ஷபாலி வர்மா (0) ஏமாற்றினார். ஜெமிமா ரோட்ரிஸ் (34) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் மேக் லானிங் (17), அன்னாபெல் (19), மரிஜன்னே கேப் (12), ஷிகா பாண்டே (14) நிலைக்கவில்லை. சாரா பிரைஸ் (23) ஆறுதல் தந்தார். டில்லி அணி 19.3 ஓவரில் 141 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பெங்களூரு சார்பில் ரேணுகா சிங், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.நல்ல துவக்கம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, டேனி வியாட்-ஹாட்ஜ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய மந்தனா, 27 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது வியாட்-ஹாட்ஜ் (42) அவுட்டானார். மந்தனா 47 பந்தில், 81 ரன் (3 சிக்சர், 10 பவுண்டரி) குவித்தார்.அருந்ததி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரிச்சா கோஷ் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் (11), எல்லிஸ் பெர்ரி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.