உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாம்பியன்ஸ் டிராபி: இழுபறி நீடிப்பு

சாம்பியன்ஸ் டிராபி: இழுபறி நீடிப்பு

துபாய்: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது தொடர்பான இழுபறி நீடிக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்தில் உள்ள அணிகள் பங்கேற்கும். இத்தொடர் பாகிஸ்தானில் வரும், 2025, பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே துபாயில் நடத்தலாம் என ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்தியது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து ஆலோசிக்க, ஐ.சி.சி., செயற்குழுவின் அவசர கூட்டம் நேற்று துபாயில் நடந்தது. பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா 'ஆன்லைன்' மூலம் பங்கேற்றார். பி.சி.பி., தலைவர் மொசின் நக்வி நேரில் கலந்து கொண்டார். இரு நாடுகளில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. பாகிஸ்தானில் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது. இதனால், ஒருமனதாக முடிவு எட்டப்படவில்லை. ஐ.சி.சி., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''சிறிது நேரம் நடந்த செயற்குழு கூட்டம், ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் கூட்டம் நடக்க உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை திட்டமிட்டபடி நடத்துவது குறித்து அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து நல்ல முடிவு எடுப்போம். அடுத்த சில நாட்கள் தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடக்கும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி