ஆசிய கோப்பை அணியில் சுதர்சன்
புதுடில்லி: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் செப்டம்பர் 9-28ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு (செப். 20-26) முன்னேறும். இதில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் செப். 28ல் நடக்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்தலாம். இதற்கான இந்திய அணி, ஆகஸ்ட் மூன்றாவது வாரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆப்பரேசன் செய்துள்ள 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார், முழு உடற்தகுதி பெறாத பட்சத்தில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக களமிறங்கலாம். சமீபத்திய 'டி-20' போட்டிகளில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி இந்தியாவுக்கு சிறந்த துவக்கம் தந்தது. இருப்பினும், அடுத்த ஆறு மாதத்தில் 'டி-20' உலக கோப்பை வரவுள்ள நிலையில், 'டாப் ஆர்டரை' பலப்படுத்தும் வகையில், கடந்த ஐ.பி.எல்., தொடரில் ரன் மழை பொழிந்த சாய் சுதர்சன் (759 ரன்), சுப்மன் (650), ஜெய்ஸ்வால் (559) அணியில் சேர்க்கப்பட உள்ளனர். ஷ்ரேயஸ், 'ஆல் ரவுண்டர்' அக்சர் படேல், குல்தீப், வருண் சக்ரவர்த்தி, ராகுல், திலக் வர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அணியில் இடம் பெறலாம். காயம் காரணமாக ரிஷாப் பன்ட், பணிச்சுமை குறைக்கும் வகையில் பும்ரா இதில் இடம் பெற மாட்டர்.