உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அஷ்வினுக்கு கவுரவம்... கபில் விருப்பம்

அஷ்வினுக்கு கவுரவம்... கபில் விருப்பம்

புதுடில்லி: ''அஷ்வினுக்கு பிரிவு உபச்சார போட்டியை பி.சி.சி.ஐ., ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். இதற்கான தகுதி அவருக்கு உள்ளது,'' என கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 38. தமிழகத்தை சேர்ந்த இவர், மொத்தம் 106 டெஸ்டில், 537 விக்கெட் சாய்த்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். முதல் 3 போட்டியில் 1ல் மட்டும் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் திடீரென, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் பங்கேற்றார்.இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் 65, அஷ்வின் குறித்து கூறியது:இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் அஷ்வின். இவர், ஓய்வு அறிவித்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றம் காணப்படுகிறது. அதேநேரம், அஷ்வின் முகத்திலும் லேசான வருத்தத்தை கண்டேன். அவர் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டார். இந்நிகழ்வு சோகமானது. அஷ்வினை கடைசியாக ஒரு பிரிவு உபச்சார போட்டியில் பங்கேற்க வைத்து, சிறப்பான முறையில் வழியனுப்ப வேண்டும். இதற்கான தகுதி அவருக்கு உள்ளது. திடீர் அறிவிப்புஅஷ்வின் பொறுத்திருந்து இந்திய மண்ணில் ஓய்வை அறிவித்து இருக்கலாம். ஆனால் அவர் ஏன் இப்படி, திடீரென அறிவித்தார் எனத் தெரியவில்லை. எனினும் அவரது முடிவுக்கு மரியாதை தர வேண்டும். தேசத்திற்காக 106 டெஸ்ட் விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை, யாராலும் ஈடுகட்ட முடியாது. ஏனெனில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் தயாராக இருந்தார். இது தான் அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டியது. பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவரும் கிரிக்கெட்டில், அஷ்வின் தனது திறமையால் ஆதிக்கம் செலுத்தினார். மிகவும் துணிச்சலானவர். போட்டியின் எந்த சூழலிலும் பந்துவீச தயாராக இருந்தார். விக்கெட் வீழ்த்த வேண்டிய சூழலில், கேப்டன்கள் அழைக்கும் ஒரே பவுலர் அஷ்வின். சூழலுக்கு ஏற்ப தனது திட்டத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் தந்திரம் கொண்டவர். இதுபோன்ற சிறப்பான பவுலரை கண்டறிய முடியுமா எனத் தெரியவில்லை. சாம்பியன் பவுலர்கும்ளே போல புதிய பந்தில், பவுலிங் செய்த அபூர்வமான பவுலர் அஷ்வின். பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் அசத்தியவர். கேரம் பால், ஸ்லோ பால் என விதவிதமாக பவுலிங் செய்தார். கிரிக்கெட் களத்தில் வெற்றிக்காக அனைத்து வழியிலும் போராடினார். அஷ்வின் ஒரு சாம்பியன். நமக்காக அதிக வெற்றி தேடித் தந்தார். உலகில் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.நம்பிக்கை உள்ளதுகபில் தேவ் கூறுகையில்,'' இந்தியாவின் 'மேட்ச் வின்னர்' அஷ்வின். டெஸ்ட் தொடரில் அதிக தொடர் நாயகன் (11) விருது வென்ற இந்திய வீரர். இவரை, இந்திய கிரிக்கெட் போர்டு சிறப்பாக முறையில் வழியனுப்பும் என நம்பிக்கை உள்ளது,'' என்றார்.கும்ளே ஏமாற்றம்இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ளே (டெஸ்டில் 619 விக்கெட்) கூறுகையில்,'' தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இந்திய அணியின் 'மேட்ச் வின்னராக' இருந்தார் அஷ்வின். இவர், ஓய்வு பெற்றது ஏமாற்றம் தருகிறது. ஏனெனில் எனது சாதனையை அஷ்வின் தகர்க்க விரும்பினேன்,'' என்றார்.சென்னையில் உற்சாக வரவேற்புஓய்வு பெற்ற அஷ்வின் நேற்று சென்னை திரும்பினார். பின் வீடு திரும்பிய இவருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு தரப்பட்டது. அப்போது அவர் கூறுகையில்,'' இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடைசியாக 2011 உலக கோப்பை வென்று திரும்பிய போது, இதுபோல வரவேற்பு இருந்தது. ஓய்வு பெற்றதில் எவ்வித வருத்தமும் இல்லை. தற்போது இந்திய அணியில் இருந்து மட்டும் தான் விடை பெற்றுள்ளேன். கிரிக்கெட் வீரராக தொடர்வேன்,'' என்றார். அஷ்வின் குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில்,'' அஷ்வின் ஓய்வு குறித்து கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது. இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். எவ்வளவு காலத்திற்குத் தான் அவமானத்தை பொறுத்துக் கொண்டிருப்பார். இது அவருக்குத் தான் தெரியும்,'' என்றார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில்,'' எனது தந்தைக்கு மீடியாவிடம் பேசிய அனுபவம் இல்லை. தயவு செய்து அவரை, மன்னித்து விட்டுவிடுங்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
டிச 20, 2024 20:30

சிறநத தமிழக கிரிக்கெட் வீரர். பொதுவாக நம் தமிழக வீரர்களை நிலைக்க விட மாட்டார்கள்.ஸ்ரீ காந்ததின் அனுபவம். அவர் கேப்டன் அடுத்த முறை அவர் டீமிலேயெ இருக்க மாட்டார்.பாகிஸ்தானில் விளயாடும் போது அவர் தாக்க பட்டார் நம் கிரிக்கெட் போர்டு கண்டு கொள்ளவில்லை. எவ்வளவு மன உளைச்சலில் இருந்திருப்பார். நம் கிரிக்கட்டு விளையாட்டிலேயே முதல் முதலில் தைரியமாக எந்த பணத்தையும் விளையாட துணிந்து சிக்ஸர் பௌலர் எண்டு வெளுத்து வாங்கினார். அதன் தாக்கம் பொறாமை வயிற்றெரிச்சல். அவர் நிலமையை கண்டு ஒதுங்கினார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை