ராய்ப்பூர்...யார் சூப்பர் * தொடரை வெல்லுமா இந்தியா
ராய்ப்பூர்: ராய்ப்பூரில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. இதில் இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடரை 2-0 என கைப்பற்றலாம். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடக்க உள்ளது.அனுபவம் பலம்கடந்த போட்டியில் அனுபவ வீரர்களான ரோகித் (57 ரன்), விராத் கோலி (135 ரன், 52வது சதம்) விளாச, இந்தியா 349 ரன் குவித்தது. இவர்களது அதிரடி இன்றும் தொடரலாம். ஜெய்ஸ்வால் நல்ல துவக்கம் தர வேண்டும். 4வது இடத்தில் வந்த ருதுராஜ் சோபிக்கவில்லை. இவருக்கு பதில் ரிஷாப் பன்ட் அல்லது திலக் வர்மாவை சேர்க்கலாம். 5வது இடத்தில் களமிறக்கப்பட்ட 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் தடுமாறினார். இதனால் ரன் வேகம் குறைந்தது. 3 ஓவர் பந்துவீசி 18 ரன் விட்டுக் கொடுத்தார். குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜோ என இரு 'ஸ்பின்னர்'கள் இருப்பதால், வாஷிங்டன் இடத்தை நிதிஷ் குமார் பிடிக்கலாம். 6வது இடத்தில் வந்து அரைசதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல் மீண்டும் கைகொடுக்க காத்திருக்கிறார். 'வேகத்திற்கு' அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளனர். முதல் போட்டியில், புதிய பந்தில் 2 விக்கெட் சாய்த்த ராணா, கடைசி கட்டத்தில் ரன்னை வாரி வழங்கினார். இன்று சுதாரிக்க வேண்டும். 'சுழலில்' 4 விக்கெட் சாய்த்த குல்தீப் 'மேஜிக்' தொடரலாம். வருகிறார் பவுமாதென் ஆப்ரிக்க தரப்பில் 'ரெகுலர்' கேப்டன் பவுமா, 'சுழல்' நாயகன் மஹாராஜ் அணிக்கு திரும்புவது பலம். கடந்த போட்டியில் ரிக்கிள்டன், குயின்டன், மார்க்ரம் விரைவில் வெளியேற, 11/3 என தவித்தது. பின் 'ஆல்-ரவுண்டர்' யான்சென், பிரீட்ஸ்கி, பாஷ் துணிச்சலாக போராட, 332 ரன்னை எட்டியது. பந்துவீச்சில் மிரட்ட யான்சென், பர்கர், பாஷ் உள்ளனர்.ஆடுகளம் எப்படிராய்ப்பூர் மைதானத்தில் ரன் எடுப்பது கடினம். 'வேகங்கள்' சாதிக்கலாம். இங்கு நடந்த ஒரே ஒருநாள் போட்டியில், ஷமி 3 விக்கெட் சாய்க்க நியூசிலாந்து 34.3 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டது. பின் ரோகித் (51) விளாச, இந்தியா 20.1 ஓவரில் 111/2 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழை வருமாராய்ப்பூரில் வெப்பமான வானிலை காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.கோலி-காம்பிர் உரசல்முதல் ஒருநாள் போட்டியின் போது, 'டிரஸ்சிங் ரூமில்' பயிற்சியாளர் காம்பிரை கண்டு கொள்ளாமல் சென்றார் கோலி. நேற்று ராய்ப்பூரில் பேட்டிங் பயிற்சியை முடித்துவிட்டு காம்பிர் உடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் புறப்பட்டார். இவரை தொடர்ந்து வந்த ரோகித் மட்டும் காம்பிரிடம் சிறிது நேரம் பேசினார். வரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் தொடரில் கோலி விளையாட வேண்டும் என்கிறார் காம்பிர். இதை ஏற்க அவர் மறுக்கிறார். 2027ல் நடக்க உலக கோப்பை தொடருக்கு (50 ஓவர்) கோலியை தேர்வு செய்வது தொடர்பாகவும் இழுபறி நீடிக்கிறது. இதே போல ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தேர்வுக்குழு தலைவர் அகார்கர் உடன் ரோகித் சர்மா பேசுவதில்லை. இரு சீனியர் வீரர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது.