ரோகித் சர்மா போல வருமா * கபில் தேவ் பாராட்டு
மும்பை: டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தார் ரோகித் சர்மா 36. கடந்த 2024ல் நியூசிலாந்து (0-3), ஆஸ்திரேலியாவிடம் (1-3) டெஸ்ட் தொடர்களை மோசமாக இழந்தது. இவரது பேட்டிங் பார்மும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட இருந்தார். ஆனால் முந்திக் கொண்ட ரோகித் சர்மா 38, டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.ஏற்கனவே சர்வதேச 'டி-20' ல் (2024) இருந்து விடை பெற்ற இவர், ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்று தந்த கபில் தேவ் 66, கூறியது:இந்திய கிரிக்கெட்டுக்கு தனது சிறப்பான ஆட்டத்தினால், அசத்தலான பங்களிப்பை தந்துள்ளார் ரோகித். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய அணிக்கு தலைமை ஏற்று வெற்றி பெற்றுத் தந்தது பாராட்டுக்குரியது. தவிர பேட்டிங் திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். இந்தியாவில் மிகச் சிலரே இவரைப் போல கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ரோகித்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை, அணித் தேர்வாளர்கள் முடிவு செய்வர். சரியான வீரரை தேர்வு செய்யும் பொறுப்பை அவர்களிடம் விட்டு விட வேண்டும்.அவர்கள் யாரை தேர்வு செய்கின்றார்களோ, அவர் இந்திய அணிக்கு சிறந்த கேப்டனாக இருப்பார். இருப்பினும் ரோகித் இடத்தை நிரப்புவது கடினம் தான்.ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற முடிவு நல்லது தான். இவர் மட்டுமல்ல, சச்சின், கவாஸ்கர் என எல்லோரும் விளையாட வேண்டும் என்று தான் விரும்புவர். இந்தியாவுக்காக உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும், கோப்பை வென்று தர வேண்டும் என்று தான் நினைப்பர். ஆனால், இது தேர்வாளர்கள் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பாதுகாக்க வேண்டும்பிரிமியர் தொடரில் அசத்தும் இளம் வீரர்கள் குறித்து கபில் தேவ் கூறுகையில்,'' இந்திய இளம் வீரர்களிடம் திறமை அதிக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவரா என பார்க்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும். இதுபோன்ற வீரர்களை பாதுகாக்க வேண்டும். அடுத்த சச்சின், அடுத்த கவாஸ்கர், அடுத்த ரோகித் யார் என்பதை நாம் தான் கண்டறிய வேண்டும். இதற்கு காலம் பதில் சொல்லும்,'' என்றார்.மறக்க முடியாதுஇந்திய பேட்டிங் ஜாம்பவான் சச்சின் கூறுகையில்,'' கடந்த 2013ல் ஈடன் கார்டன் மைதானத்தில் ரோகித், முதன் முதலாக டெஸ்டில் களமிறங்கியது போது, இந்திய அணிக்கான தொப்பியை வழங்கினேன். மற்றொரு நாள் வான்கடே மைதானத்தின் பால்கனியில் உன்னுடன் நின்றிருந்தேன். இதுபோன்ற நினைவுகள் மறக்க முடியாதவை. அப்போது முதல் இப்போது வரை என, வீரராக, கேப்டனாக இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு வெற்றிகளை வழங்கிய, உனது பயணம் வியக்கத்தக்கது,'' என்றார்.ரஹானே 'ஷாக்'இந்திய அணி வீரர் ரஹானே கூறுகையில்,'' டெஸ்டில் 5-6 வது இடத்தில் விளையாடத் துவங்கினார். இவ்வகை கிரிக்கெட்டுக்கு ஏற்ப, தனது பேட்டிங்கை மேம்படுத்திக் கொண்டார். இதனால் துவக்க வீரராக களமிறங்கினார். பின் அதற்கேற்ப தனது ஸ்டைலை மாற்றினார். அணியிலுள்ள வீரர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என விரும்பினார். திடீரென டெஸ்டில் ரோகித் ஓய்வு பெற்றது 'ஷாக்' ஆக உள்ளது,' என்றார்.