என்ன பொருத்தம்...ஆஹா நாலாவது பொருத்தம் * ஸ்ரேயாஸ் பெருமிதம்
சண்டிகர்: ''பேட்டிங் வரிசையில் நாலாவது இடம் எனக்கு பொருத்தமானது. ராசியான இந்த இடத்தில் களமிறங்கி தான் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் ரன் குவித்தேன்,''என ஸ்ரேயாஸ் தெரிவித்தார். இந்திய அணியின் பேட்டிங் 'சூப்பர் ஸ்டார்' ஸ்ரேயாஸ், 30. கடந்த 2023ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் நான்காவது இடத்தில் களமிறங்கிய இவர், 530 ரன் (11 போட்டி, சராசரி 66.25, ஸ்டிரைக் ரேட் 113.24) எடுத்தார். பின் முதுகு பகுதி காயத்தில் இருந்து மீண்ட இவர், ஐ.பி.எல்., தொடரில் (2024) கோல்கட்டா அணிக்கு கோப்பை வென்று தந்தார். சாம்பியன் வீரர்சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (50 ஓவர்) 4வது இடத்தில் வந்த ஸ்ரேயாஸ், இந்தியா சார்பில் அதிக ரன் எடுத்த வீரரானார். 243 ரன் (5 போட்டி, சராசரி 48.60) எடுத்த இவர், கோப்பை கனவை நனவாக்கினார். இவரை 'சைலன்ட் ஹீரோ' என கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்தார். வரும் ஐ.பி.எல்., தொடரில் (மார்ச் 22-மே 25), பஞ்சாப் அணி கேப்டனாக புது அவதாரம் எடுக்கும் ஸ்ரேயாஸ் அளித்த பேட்டி:சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி தந்தது. துபாய் ஆடுகளம் 'ஸ்பின்னர்'களுக்கு ஏற்றது. இதை புரிந்து கொண்டு பேட் செய்தேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்திய அணியின் 'மிடில் ஆர்டர்' பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறேன். நான்காவது இடம் எனக்கு பொருத்தமானது. உலக கோப்பை அல்லது சாம்பியன்ஸ் டிராபி என எந்த தொடராக இருந்தாலும், நான்காவது இடத்தில் களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கும். இந்த இடம், எனது பேட்டிங்கை மெருகேற்றும். நேர்மறையான எண்ணம்என்னை அமைதியான வீரன் என சொல்கின்றனர். எனது பலம் தெரியும். எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருப்பேன். எனது திறமை மீது நம்பிக்கை உள்ளது. கடின பயிற்சியுடன் நேர்மையாக இருந்தால், வாய்ப்பு தேடி வரும். அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது பற்றி சிந்திக்கவில்லை. தற்போதைக்கு ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்கு கோப்பை பெற்று தருவதே இலக்கு. இது, 'டி-20' தொடர் என்பதால், எனது பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கலாம். பயிற்சியாளர் பாண்டிங் அனுமதி அளித்தால், 3வது இடத்தில் களமிறங்கி முத்திரை பதிக்க காத்திருக்கிறேன்.இவ்வாறு ஸ்ரேயாஸ் கூறினார்.14 வயது அனுபவம்மஹாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரேயாஸ் கூறுகையில்,''ஆரம்பத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடினேன். 14 வயதுக்கு உட்பட்ட மும்பை அணிக்காக பங்கேற்ற போது, ஐ.பி.எல்., போட்டிகளில் பந்து எடுத்து கொடுக்கும் சிறுவனாக களமிறங்கினேன். அது தான் எனது முதல் ஐ.பி.எல்., அனுபவம். எனது நண்பர்கள் எல்லாம் முன்னணி வீரர்களை சந்தித்து ஆட்டோகிராப், கிளவ்ஸ், பேட் பரிசாக பெறுவர். கூச்ச சுபாவம் கொண்ட நான் தயங்கி நிற்பேன். ஒரு முறை ராஸ் டெய்லரை பார்த்து 'நான் உங்களது ரசிகன்' என்று சொன்னேன். அதற்கு அவர் நன்றி சொன்னது மறக்க முடியாதது,''என்றார். பல மொழி எப்படிதமிழ் உட்பட இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் கிரிக்கெட் போட்டி வர்ணனை செய்யப்படுகிறது. இது பற்றி ஸ்ரேயாஸ் கூறுகையில்,''மும்பையில் கிரிக்கெட் விளையாட துவங்கிய போது, எங்களது மொழியில் மட்டும் பேசினோம். இப்போது அனைத்து உள்ளூர் மொழியிலும் கிரிக்கெட் 'ஷாட்' பற்றி விதவிதமாக வர்ணிக்கின்றனர். ஆரம்பத்தில் கேட்ட போது, கலாசார அதிர்ச்சி போல இருந்தது. கிரிக்கெட்டை வர்ணிக்க, இத்தனை வார்த்தைகள் பயன்படுத்துகின்றனரா என வியப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.