உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 3 சூப்பர் ஓவர் அதிசயம் * நெதர்லாந்து சாதனை வெற்றி

3 சூப்பர் ஓவர் அதிசயம் * நெதர்லாந்து சாதனை வெற்றி

கிளாஸ்கோ: 'டி-20' கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக மூன்றாவது 'சூப்பர் ஓவரில்' நெதர்லாந்து அணி வென்றது.ஸ்காட்லாந்தில் முத்தரப்பு 'டி-20' தொடர் நடக்கிறது. கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் மோதின. முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்தது.பின் நேபாள அணிக்கு கேப்டன் ரோகித் பவுடல் (48), குஷால் (34) கைகொடுத்தனர். கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டன. லமிசேன், நந்தன் இணைந்து 15 ரன் மட்டும் எடுத்தனர். நேபாள அணியும் 20 ஓவரில் 152/8 ரன் எடுக்க, போட்டி 'டை' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது.மூன்று முறைமுதல் சூப்பர் ஓவரில் நேபாள அணி 19/1 ரன் எடுத்தது. நெதர்லாந்தும் 19/0 ரன் எடுக்க, மீண்டும் போட்டி 'டை' ஆனது. வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை 'சூப்பர் ஓவர்' நடத்தப்பட வேண்டும் என்ற விதி காரணமாக, போட்டி இரண்டாவது 'சூப்பர் ஓவருக்கு' சென்றது. இம்முறை முதலில் களமிறங்கிய நெதர்லாந்து 17/1 ரன், அடுத்து நேபாளம் 17/0 ரன் எடுத்ததால், மூன்றாவது முறையாக போட்டி 'டை' ஆனது. இதனால் மூன்றாவது முறையாக 'சூப்பர் ஓவர்' நடந்தது. இதில் முதலில் விளையாடிய நேபாள அணி, 0.4 ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டை (0/2) இழந்தது. அடுத்து வந்த நெதர்லாந்து அணிக்கு லெவிட் (6), முதல் பந்தில் சிக்சர் அடிக்க, 'திரில்' வெற்றி பெற்றது. 'டி-20' வரலாற்றில் மூன்றாவது 'சூப்பர் ஓவரில்', ஒரு அணி வெற்றி பெற்றது இதுதான் முதன் முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை