அசத்துவரா ரோகித், விராத் கோலி * விஜய் ஹசாரே தொடரில்...
பெங்களூரு: ரோகித், கோலி உள்ளிட்டோர் பங்கேற்கும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் உள்ள வீரர்கள் இத்தொடரில் குறைந்தபட்சம் 2 போட்டியில் பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ., உத்தர விட்டுள்ளது.இதையடுத்து 15 ஆண்டுக்குப் பின், சீனியர் வீரர் கோலி இத்தொடரில் டில்லி அணிக்காக களமிறங்குகிறார். கடைசியாக 2010ல் குர்கானில் நடந்த போட்டியில் பங்கேற்றார். உள்ளூர் ஒருநாள் அரங்கில் 13 போட்டியில் விளையாடிய கோலி 819 ரன் (4 சதம், 3 அரைசதம்) எடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் கேப்டனாக உள்ளார். இன்று டில்லி அணி, நிதிஷ் குமார் தலைமையிலான ஆந்திராவுடன் ('டி' பிரிவு) மோதுகிறது. மும்பை அணி தனது முதல் இரு போட்டியில் சிக்கிம், உத்தரகாண்ட்டை சந்திக்கிறது. இதற்கான மும்பை அணியில் ('சி' பிரிவு) ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார். 'டி-20' அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில், இன்று பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார்.ரசிகர்களுக்கு 'நோ'கடந்த ஆண்டு பிரிமியர் தொடர் கொண்டாட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதன் பின் இம்மைதானத்தில் எவ்வித போட்டியும் நடக்கவில்லை.கோலி விளையாடினால், 2000 முதல் 3000 ரசிகர்களை அனுமதிக்க, கர்நாடக கிரிக்கெட் சங்கம் விரும்பியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் போட்டி நடக்கும். ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.வெல்லுமா தமிழகம் விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று ஆமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி, புதுச்சேரியை சந்திக்கிறது.