வாஷிங்டன் சுந்தருக்கு வந்த மவுசு * 3 அணிகள் போட்டி
சென்னை: ஐ.பி.எல்., ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை வாங்க சென்னை, மும்பை உள்ளிட்ட 3 அணிகள் ஆர்வமாக உள்ளன.ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசன், 2025ல் நடக்க உள்ளது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்க வைக்கலாம். இப்பட்டியலை அக்.31 மாலை 5 மணிக்குள் பி.சி.சி.ஐ., வசம் அளிக்க வேண்டும்.இம்முறை தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தருக்கு அதிக மவுசு காணப்படுகிறது. சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான புனே டெஸ்டில் 'சுழலில்' அசத்தினார். முதல் இன்னிங்சில் 7, இரண்டாவது இன்னிங்சில் 4 சேர்த்து மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தினார். இதனால், ஐ.பி.எல்., ஏலத்தில் இவரை ஒப்பந்தம் செய்ய சென்னை, மும்பை, குஜராத் அணிகள் ஆர்வமாக உள்ளன. 'சுழலுக்கு' ஒத்துழைக்கும் சென்னை ஆடுகளம் இவருக்கு சாதகமானது. 'பவர்பிளே' ஓவரில் இவரை பயன்படுத்த மும்பை விரும்புகிறது.மீண்டும் சுப்மன்குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில், ரஷித் கான், சாய் சுதர்சன் தக்க வைக்கப்பட உள்ளனர். 'அன்கேப்ட்' வீரர் அடிப்படையில் டிவாட்டியா, ஷாருக் கான் இடம் பெறுவர். வாஷிங்டனை வாங்கினால், ரஷித் உடன் இரட்டை 'சுழல்' தாக்குதல் நடத்தலாம் என திட்டமிடுகிறது.'ஜாக்பாட்' நிச்சயம்தற்போது ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ளார் வாஷிங்டன். இவரை 2022ல் ரூ. 8.75 கோடிக்கு வாங்கியது. ஆனாலும் 'இம்பேக்ட்' வீரர் விதி காரணமாக 2024ல் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2 போட்டியில் விளையாடிய இவர், 5 ஓவர் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஐதராபாத் அணி இம்முறை கேப்டன் பாட் கம்மின்ஸ், கிளாசன், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவை தக்க வைக்கும். வாஷிங்டன் சுந்தரை 'ரைட் டு மேட்ச் கார்டு' உரிமையை பயன்படுத்தி வாங்க முயற்சிக்கலாம்.வாஷிங்டனை வாங்க பல அணிகள் ஆர்வமாக இருப்பதால், அதிக தொகையை தட்டிச் செல்வது உறுதி.