உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து: லிவிங்ஸ்டன் அசத்தல் அரைசதம்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து: லிவிங்ஸ்டன் அசத்தல் அரைசதம்

கார்டிப்: இரண்டாவது 'டி-20' போட்டியில் இங்கிலாந்து அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி கார்டிப்பில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பில் சால்ட் 'பவுலிங்' தேர்வு செய்தார். ஹெட் மிரட்டல்: மிட்சல் மார்ஷிற்கு உடல்நிலை சரியில்லாததால், ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பை ஏற்ற டிராவிஸ் ஹெட், அதிரடி துவக்கம் தந்தார். 14 பந்தில் 31 ரன் விளாசினார். ஷார்ட், 28 ரன் எடுத்தார். பிரேசர் மெக்குர்க் அரைசதம் எட்டினார். பின் ஜோஷ் இங்லிஸ் (42), ஹார்டி கைகொடுக்க, கடைசி 5 ஓவரில் 60 ரன் எடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது. ஹார்டி (20), கிரீன் (13) அவுட்டாகாமல் இருந்தனர். 50வது போட்டி: சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு வில் ஜேக்ஸ் (12), காக்ஸ் (0), பில் சால்ட் (39) விரைவில் வெளியேற, 8.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 79 ரன் எடுத்து தவித்தது. கடைசி 10 ஓவரில் 104 ரன் தேவை என்ற நிலையில், லிவிங்ஸ்டன் அசத்தினார். தனது 50வது 'டி-20' போட்டியில் விளையாடிய இவர், 27 பந்தில் அரைசதம் எட்டினார். ஜாம்பா ஓவரில் (14வது) ஜேக்கப் பெத்தல், 20 ரன் (4,6,4,4) விளாச, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. பெத்தல் 44 ரன்னுக்கு அவுட்டானார். லிவிங்ஸ்டன், 87 ரன்னுக்கு(47 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார். ஷார்ட் பந்தில் ஒரு ரன் எடுத்த ரஷித் வெற்றியை உறுதி செய்தார்.இங்கிலாந்து அணி 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஓவர்டன் (4), ரஷித்(1) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர் 1-1 என சமநிலையை எட்டியது.'ஆல்-ரவுண்டராக' கலக்கிய லிவிங்ஸ்டன் (87 ரன், 2 விக்.,) ஆட்டநாயகன் விருது வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி