உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா ஹாட்ரிக் வெற்றி: யூத் ஒருநாள் போட்டியில் அசத்தல்

இந்தியா ஹாட்ரிக் வெற்றி: யூத் ஒருநாள் போட்டியில் அசத்தல்

புதுச்சேரி: மூன்றாவது 'யூத்' ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.புதுச்சேரியில், 19 வயதுக்குட்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட 'யூத்' ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.இந்திய அணிக்கு சாஹில் பராக் (20) சுமாரான துவக்கம் கொடுத்தார். ஹர்வன்ஷ் பங்கலியா (46), கிரண் சோர்மலே (30), ஹர்திக் ராஜ் (30) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய ருத்ரா படேல் (77), கேப்டன் முகமது அமான் (71) அரைசதம் கடந்தனர். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆலிவர் பீக் (111), ஸ்டீவன் ஹோகன் (104) சதம் கடந்து கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 317 ரன் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்திக் ராஜ் 3, கிரண் சோர்மலே, யுதாஜி குஹா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.'ஹாட்ரிக்' வெற்றி கண்ட இந்தியா 3-0 என, தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. அடுத்து இவ்விரு அணிகள் சென்னையில், இரண்டு போட்டிகள் (செப். 30-அக். 3, அக். 7-10) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ