உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பதிலடிக்கு இந்திய அணி ரெடி: அயர்லாந்துடன் 2வது மோதல்

பதிலடிக்கு இந்திய அணி ரெடி: அயர்லாந்துடன் 2வது மோதல்

பெல்பாஸ்ட்: இந்திய அணி இன்றைய இரண்டாவது 'டி-20' போட்டியில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில், 'டி-20' உலக சாம்பியன் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பெல்பாஸ்ட் நகரில் இரண்டாவது போட்டி நடக்கவுள்ளது. இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.ஷ்ரேயஸ் சவால்: இந்திய அணிக்கு முதல் போட்டியில் பேட்டிங் எடுபடவில்லை. துவக்க வீரர் அபிஷேக் சர்மா (49) தவிர, மற்றவர்கள் சோபிக்கவில்லை. 3 மாதங்களுக்கு முன் 'டி-20' உலக கோப்பை நாயகனாக ஜொலித்த சஞ்சு சாம்சன் (5), நான்கு பந்து மட்டுமே தாக்குப்பிடித்தார். இஷான் கிஷான் கைகொடுக்கவில்லை. 963 நாளுக்கு பின் சர்வதேச 'டி-20' போட்டிக்கு திரும்பிய ஷ்ரேயஸ் ஐயர் (3) தடுமாறினார். சூர்யகுமாருக்கு பதில், கேப்டனாக முதல் முறையாக களம் கண்ட இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி கட்டத்தில் 'ரன் ரேட்' அதிகரித்ததால், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபேவால் அணியை கரை சேர்க்க முடியவில்லை.வருவாரா வைபவ்: முதல் போட்டியில் தோற்ற நிலையில், இளம் வைபவ் சூர்யவன்ஷியை, 15, இன்று அறிமுக வீரராக களமிறக்க வாய்ப்பு குறைவு. இவரை சேர்த்தால், துவக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும். சாம்சன் 3வது வீரராக வர வேண்டியிருக்கும். இன்று ஒட்டுமொத்த பேட்டிங் படையும் எழுச்சி காண வேண்டும். தடுமாறும் வாஷிங்டன்: பவுலிங்கில் அர்ஷ்தீப், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா நம்பிக்கை தருகின்றனர். முதல் போட்டியின் 16வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 19 ரன், 17வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா 27 ரன் வாரி வழங்கியது வினையாக அமைந்தது. வாஷிங்டனுக்கு ஒரு ஓவர் தான் கொடுத்தனர். சமீப காலமாக இவருக்கு ஒன்று அல்லது இரு ஓவர் தான் வழங்குகின்றனர். இது, அணியில் இவரது பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அயர்லாந்து அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் லார்கன் டக்கர், கேரத் டெலேனி, டாக்ரெல் அசத்துகின்றனர். பந்துவீச்சில் மாத்யூ ஹம்ப்ரிஸ், மூண்ட்ரா, மாட் ஹாலர்டு மிரட்டுவது பலம். இந்தியாவுக்கு எதிராக முதல் 'டி-20' போட்டியில் வென்ற அயர்லாந்து, முதல் முறையாக தொடரை கைப்பற்றும் ஆசையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி