ஐ.பி.எல்., சரவெடி சம்பவம் ஆரம்பம்: சாதிக்குமா சென்னை அணி
கோல்கட்டா: ஐ.பி.எல்., தொடர் இன்று கோல்கட்டாவில் ஆரம்பமாகிறது. விண்ணைத் தொடும் சிக்சர்கள், மந்திரப் பந்துவீச்சு, துடிப்பான பீல்டிங், நடன மங்கைகளின் ஆட்டம் என போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் உற்சாகமாக இருக்கும். கொளுத்தும் கோடையில், உலக நட்சத்திர வீரர்களின் அசாத்திய திறமையை காண, கண் கோடி வேண்டும். 'தல' தோனி களமிறங்குவதால், சேப்பாக்கம் அரங்கில் மீண்டும் 'விசில்' பறக்கும். ஆறாவது முறையாக கோப்பை வென்று 'சம்பவம்' நிகழ்த்த நம்ம சென்னை அணி காத்திருக்கிறது.பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 18வது சீசன் இன்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. பைனல் வரும் மே 25ல் நடக்க உள்ளது. சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. சமீபத்திய வீரர்கள் 'மெகா' ஏலத்திற்கு பிறகு, அணிகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னணி வீரர்கள் அணி மாறியுள்ளதால், இம்முறை விறுவிறுப்பு அதிகரிக்கும். வலுவான சென்னை: சென்னை அணிக்காக 43 வயதிலும் 'தல' தோனி விளையாட இருப்பது சிறப்பு. இவரது 'கூலான' வியூகம், கடைசி கட்டத்தில் களமிறங்கி 'ஹெலிகாப்டர் ஷாட்' மூலம் சிக்சர் அடிப்பது பலம். கேப்டனாக ருதுராஜ், 'ஸ்பின் கிங்' அஷ்வின், ஜடேஜா, கான்வே இடம் பெற்றிருப்பது சாதகம். 'வேகத்துக்கு' பதிரானா உள்ளார். 'மிடில் ஆர்டரில்' ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ஷிவம் துபே கைகொடுத்தால், சென்னை அணி ஆறாவது முறையாக கோப்பை வென்று சாதனை படைக்கலாம்.தேறுமா மும்பை: ஐந்து கோப்பை வென்ற மும்பை அணி, கடந்த முறை ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. உள்ளூர் ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக 10வது இடம் பிடித்தது. இம்முறை பும்ரா காயத்தால் அவதிப்படுவது பலவீனம். '360 டிகிரி' சுழன்று விளையாடும் சூர்யகுமாரை நம்பி களமிறங்குகிறது. திலக் வர்மா, பவுல்ட் கைகொடுக்கலாம்.'சுழல்' ராஜ்யம்: 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணியில் இருந்து ஷ்ரேயஸ் விலகியது பின்னடைவு. அனுபவ ரகானே 36, தலைமை ஏற்கிறார். ரசல், வெங்கடேஷ், ரிங்கு சிங் விளாசலாம். வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், மொயீன் அலி என 'சுழல்' படையே உள்ளது. சூப்பர் பேட்டிங்: ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், கேப்டன் சாம்சன், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜுரல், ஹெட்மெயர் இருப்பதால், பேட்டிங் கலக்கலாக உள்ளது. வேகத்துக்கு சந்தீப் சர்மா, ஆர்ச்சர் உள்ளனர். தரமான 'ஸ்பின்னர்'கள் இல்லாதது பலவீனம்.வருகிறார் படிதார்: பெங்களூரு அணி ரஜத் படிதர் தலைமையில் களமிறங்குகிறது. கோலி அருமையான 'பார்மில்' இருப்பது பலம். அதிரடிக்கு பில் சால்ட். படிக்கல் உள்ளனர். குர்ணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா கைகொடுத்தால், கரை சேரலாம். பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசல்வுட்டை அதிகம் சார்ந்துள்ளது.துவக்கம் மிரட்டல்: ஐதராபாத் அணிக்கு 'டிராவிஷேக்' என வர்ணிக்கப்படும் துவக்க ஜோடி டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மீண்டும் மிரட்டலாம். நிதிஷ் குமார், கிளாசன், இஷான் கிஷான் உள்ளனர். கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜாம்பா, ஷமி என பந்துவீச்சும் பலமாக உள்ளது. கடந்த முறை பைனலில் கோல்கட்டாவிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்தது. இம்முறை பரிகாரம் தேட முயற்சிக்கலாம்.குஜராத் எப்படி: குஜராத் அணிக்கு 'டாப்-ஆர்டரில்' கேப்டன் சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன் வேகமாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது பலவீனம். ஷாருக் கான், ரபாடா, ரஷித் கான், சாய் கிஷோர், கிளன் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர் கைகொடுக்கலாம்.டில்லி 'கில்லி': டில்லி அணி பந்துவீச்சில் 'கில்லி'யாக உள்ளது. ஸ்டார்க், முகேஷ் குமார், நடராஜன், கேப்டன் அக்சர் படேல், குல்தீப், மோகித் சர்மா உள்ளனர். பேட்டிங்கில் டுபிளசி, ராகுல், ஸ்டப்ஸ் அசத்தலாம்.'ஆல்-ரவுண்டர்' அதிகம்: பஞ்சாப் அணிக்கு ஷ்ரேயஸ் தலைமை ஏற்கிறார். ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், யான்சென், ஓமர்சாய் என நிறைய 'ஆல்-ரவுண்டர்'கள் இருப்பது பலம். 'காஸ்ட்லி' ரிஷாப்: ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ. 27 கோடி) வாங்கப்பட்ட கேப்டன் ரிஷாப் பன்ட் தான் லக்னோ அணியின் பலம். மிட்சல் மார்ஷ், மார்க்ரம், பூரன், மில்லர் என உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், சாதிக்க வாய்ப்பு உள்ளது. 'வேகப்புயல்' மயங்க் யாதவ் காயத்தால் அவதிப்படும் நிலையில், மொசின் கான், பிஷ்னோய், ஆகாஷ் தீப் கைகொடுக்கலாம். ஒரே ஓவரில் முடிவு தலைகீழாக மாறும், ஐ.பி.எல்., போட்டியில் கோப்பை வெல்லும் அணியை கணிப்பது கடினம். கடைசி பந்து வரை பதட்டப்படாமல் செயல்படும் அணிக்கே கோப்பை வசப்படும்.இதுவரை சாம்பியன்ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை, மும்பை முதலிடத்தில் உள்ளன. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றன. கோலி 'ஸ்வீட் 18'பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாடும் கோலியின் ஜெர்சி 'நம்பர் 18'. இந்த முறை நடப்பது 18வது ஐ.பி.எல்., தொடர். 18வது நமபர் ராசி, கோலிக்கு கைகொடுத்தால், கோப்பையை முதல் முறையாக வெல்லலாம். அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், 252 போட்டியில், 8004 ரன் குவித்துள்ளார்.சஹால் '205'அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் சஹால் முதலிடத்தில் உள்ளார். இவர், 160 போட்டியில், 205 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களில் சாவ்லா (192 விக்கெட், 192 போட்டி), டுவைன் பிராவோ (183 விக்கெட், 161 போட்டி) உள்ளனர். இம்முறை சென்னை அணிக்காக விளையாடும் அஷ்வின், 180 விக்கெட் (212 போட்டி) சாய்த்துள்ளார். 'சிக்சர் மன்னன்' கெய்ல்அதிக சிக்சர் பறக்கவிட்ட வீரர்கள் வரிசையில் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 142 போட்டியில், 357 சிக்சர் விளாசினார். அடுத்த நான்கு இடங்களில் ரோகித் (280 சிக்சர், 257 போட்டி), கோலி (272 சிக்சர், 252 போட்டி), தோனி (252 சிக்சர், 264 போட்டி), டிவிலியர்ஸ் (251 சிக்சர், 184 போட்டி) உள்ளனர்.'ஹாட்ரிக்' சாதனைஐ.பி.எல்., அரங்கில், இதுவரை 22 முறை 'ஹாட்ரிக்' சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதில் அமித் மிஸ்ரா (2008, 2011, 2013) அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் 2 (2009ல் 2), பாலாஜி (2008), நிடினி (2008), ரோகித் சர்மா (2009), பிரவீண் குமார் (2010), அஜித் சண்டிலா (2012), சுனில் நரைன் (2013), பிரவீண் தாம்பே (2014), ஷேன் வாட்சன் (2014), அக்சர் படேல் (2016), சாமுவேல் பத்ரீ (2017), ஆன்ட்ரூ டை (2017), ஜெயதேவ் உனத்கட் (2017), ஸ்ரேயாஸ் கோபால் (2019), சாம் கரான் (2019), ஹர்ஷல் படேல் (2021), யுவேந்திர சஹால் (2022), ரஷித் கான் (2023) தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.101 சதம்ஐ.பி.எல்., வரலாற்றில் இதுவரை 101 சதம் பதிவாகி உள்ளன. மொத்தம் 53 பேர் சதம் விளாசினர். இதில் 27 இந்தியர், 26 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். அதிகபட்சமாக 2024ல் 14, 2023ல் 12 சதம் பதிவாகின.* முதல் சதத்தை கோல்கட்டாவின் பிரண்டன் மெக்கலம் (2008, எதிர்: பெங்களூரு) பதிவு செய்தார்.* அதிகபட்சமாக கோலி 8 சதம் அடித்துள்ளார்.'சூப்பர் கீப்பர்' அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் பட்டியலில் சென்னையின் தோனி முதலிடத்தில் உள்ளார். இதுவரை 264 போட்டிக்கு கீப்பராக இருந்த இவர், 42 'ஸ்டெம்பிங்', 148 'கேட்ச்' என, 190 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். அடுத்த இடத்தில் தினேஷ் கார்த்திக் (174 விக்கெட் வீழ்ச்சி) உள்ளார்.கலக்கல் 'பீல்டர்'அதிக 'கேட்ச்' செய்த 'பீல்டர்' பட்டியலில் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், 252 போட்டியில், 114 'கேட்ச்' செய்துள்ளார். அடுத்த நான்கு இடங்களில் ரெய்னா (109 'கேட்ச்'), போலார்டு (103), ஜடேஜா (103), ரோகித் (101) உள்ளனர்.அனுபவம் அதிகம்அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் தோனி முதலிடம். இவர், 264 போட்டியில் பங்கேற்றுள்ளார். அடுத்த நான்கு இடங்களில் தினேஷ் கார்த்திக் (257 போட்டி), ரோகித் சர்மா (257), விராத் கோலி (252), ரவிந்திர ஜடேஜா (240) உள்ளனர்.இமாலய வெற்றிஅதிக ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற அணிகளுக்கான வரிசையில் மும்பை முதலிடம். கடந்த 2017ல் டில்லிக்கு எதிராக 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த இரு இடங்களில் பெங்களூரு (144 ரன் வித்தியாசம், எதிர்: குஜராத், 2016), கோல்கட்டா (140 ரன் வித்தியாசம், எதிர்: பெங்களூரு, 2008) உள்ளன.* ஐ.பி.எல்., அரங்கில் 15 முறை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பதிவானது. பெங்களூரு 4, ஐதராபாத் 3, சென்னை, மும்பை தலா 2, டெக்கான், ராஜஸ்தான், கோல்கட்டா, பஞ்சாப் தலா ஒரு முறை இப்படி வெற்றி பெற்றன.அந்த குழந்தையே நீங்கதான் சார்...பீஹாரை சேர்ந்த இடதுகை பேட்டர், இளம் வைபவ் சூர்யவன்ஷி (13 ஆண்டு, 359 நாள்). 5 முதல் தர போட்டி (100 ரன்), ஒரு உள்ளூர் 'டி-20' (13 ரன்) போட்டியில் பங்கேற்றுள்ளார். சென்னையில் நடந்த யூத் டெஸ்டில் (19 வயது) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 62 பந்தில் 104 ரன் விளாசினார். ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ள வைபவ் (ரூ. 1.10 கோடி) ஐ.பி.எல்., ஏல வரலாற்றில் வாங்கப்பட்ட இளம் வீரரானார்.* கடந்த 2011, ஏப்ரல் 2ல் தோனி தலைமையில் இந்திய அணி, உலக கோப்பை (ஒருநாள்) கைப்பற்றியது. அப்போது வைபவ் பிறந்து 7 நாள் தான் ஆகியிருந்தது. தற்போது தோனியுடன் (43 வயது, 257 நாள்) விளையாட உள்ள வைபவ், ஐ.பி.எல்., தொடரில் குறைந்த வயதில் பங்கேற்கும் வீரர் என்ற பெருமை பெறவுள்ளார். 65 நாள், 74 போட்டிஐ.பி.எல்., தொடரில் (மார்ச் 22-மே 25) இம்முறை லீக் சுற்றில் 70, 'பிளே ஆப்' சுற்றில் 4 என மொத்தம் 74 போட்டிகள், 65 நாளில் நடக்க உள்ளன. சேப்பாக்கம் உட்பட 13 மைதானங்களில் போட்டிகள் நடக்கும்.