உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வைபவ் வைபோகமே... இளமை பொன்னென்று மின்னும்

வைபவ் வைபோகமே... இளமை பொன்னென்று மின்னும்

புதுடில்லி: பிரிமியர் தொடரில் மிரட்டுகிறார் பாலகன் வைபவ். யார்றா இந்தப் பையன்..? அடி ஒன்னும் 'இடி' மாதிரி இருக்கே என ரசிகர்கள் வியக்கின்றனர். 35 பந்தில் சதம் விளாசிய இவர், விரைவில் இந்திய அணிக்காகவும் சாதிக்கலாம். பீஹாரின் சமஸ்திபுர் கிராமத்தை சேர்ந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. நான்கு வயதில் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். இவரது தந்தை சூர்யவன்ஷி ஊக்கம் அளித்தார். விவசாய நிலத்தை விற்று, பாட்னாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்த்தார். வைபவை பட்டை தீட்டினார் பயிற்சியாளர் மணிஷ் ஓஜா. 10 வயதில் தினமும் 600 பந்துகளை வலை பயிற்சியில் எதிர்கொண்டார். இதன் காரணமாக பேட்டிங்கில் பிரகாசிக்க துவங்கினார்.ரூ. 1.10 கோடி பீஹார் அணிக்காக 12 வயதில் அறிமுகமானார். 13 வயதில், சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்டில் (19 வயதுக்கு உட்பட்ட) 58 பந்தில் சதம் விளாசினார். இவரது திறமையை பார்த்த ராஜஸ்தான் அணி ரூ. 1.10 கோடிக்கு வாங்கியது. இம்முறை லக்னோவுக்கு எதிராக அறிமுகமானார். தான் சந்தித்த ஷர்துல் தாகூரின் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி, ரசிகர்களை பரவசமடைய செய்தார். 20 பந்தில் 34 ரன் எடுத்தார். அதிவேக சதம்நேற்று முன் தினம் ஜெய்ப்பூரில் நடந்த குஜராத்திற்கு (20 ஓவர், 209/4) எதிரான போட்டியில் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு கைகொடுத்தார். இஷாந்த் (28 ரன்), ஜனத் (30) ஓவரில் ரன் மழை பொழிந்தார். ரஷித் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய வைபவ், 35 பந்தில் சதம் எட்டினார். 38 பந்தில் 101 ரன் (7x4, 11x6) விளாச, ராஜஸ்தான் (15.5 ஓவர், 212/2) வென்றது. 'டி-20' அரங்கில் சதம் அடித்த இளம் வீரர் என சாதனை படைத்தார் வைபவ் (14 ஆண்டு, 32 நாள்). பிரிமியர் அரங்கில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார் வைபவ் (35 பந்து). யூசுப் பதான் (37) சாதனையை தகர்த்தார். பெற்றோர் தியாகம்ஆட்டநாயகன் விருது வென்ற வைபவ் கூறுகையில்,''பிரிமியர் அரங்கில் முதல் சதத்தை மூன்றாவது இன்னிங்சிலேயே அடித்தது சிறப்பான உணர்வை தந்தது. என்னை பவுலர்கள் குறி வைப்பர் என்ற பயம் எல்லாம் கிடையாது. பந்தில் மட்டும் கவனம் செலுத்தி விளாசுவேன். எனது பெற்றோருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இரவு 11 மணிக்கு துாங்க செல்லும் எனது தாயார், எனது பயிற்சிக்காக அதிகாலையில் 2 மணிக்கு எழுந்து உணவு தயார் செய்வார். தினமும் 3 மணி நேரம் தான் துாங்குவார். எனக்காாக வேலையை துறந்தார் தந்தை. வாழ்க்கை கடினமாக இருந்த போது, 'என்னால் சாதிக்க முடியும்' என தந்தை ஊக்கம் தந்தார். எனது சாதனைகளுக்கு பெற்றோர் முக்கிய காரணம். இந்திய அணிக்காக...ராஜஸ்தான் அணியில், டிராவிட் பயிற்சி அளித்த போது, கனவு நனவானது போல இருந்தது. முதல் பந்தில் சிக்சர் அடிப்பது எனக்கு கை வந்த கலை. உள்ளூர், இந்தியாவுக்காக (19 வயதுக்குட்பட்ட) பல போட்டிகளில் முதல் பந்தில் சிக்சர் அடித்துள்ளேன். நான் விரும்பிய இடத்தில் பந்து விழுந்தால், சிக்சர் அடித்து விடுவேன். இந்தியாவுக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். இதற்கு கடின பயிற்சியை தொடர வேண்டும். நாட்டுக்காக சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்,''என்றார்.சொன்னதை செய்தார்குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன், தனது இளமை கால பயிற்சியாளர் மணிஷ் ஓஜாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார் வைபவ். அப்பேது, 'சார், குஜராத் பந்துவீச்சை சிதறடிப்பேன்,' என சொல்லியிருக்கிறார். இதற்கேற்ப அதிவேக சதம் விளாசினார் வைபவ்.ரூ. 10 லட்சம் பரிசுபீஹார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட செய்தியில்,''பிரிமியர் தொடரில் சாதனை படைத்துள்ளார் வைபவ். இவருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காகவும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன்,' என குறிப்பிட்டுள்ளார்.கிராமத்திற்கு பெருமைவைபவ் தந்தை சூர்யவன்ஷி கூறுகையில்,''எங்கள் கிராமம், பீஹார், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார் வைபவ். மகிழ்ச்சியாக உள்ளது,''என்றார்.வைபவ் பயிற்சியாளர் மணிஷ் ஓஜா கூறுகையில்,''பயிற்சியாளராக பெருமையாக உள்ளது. விளையாட்டில் பின்தங்கிய பீஹாருக்கு நம்பிக்கை ஒளியை கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரைபடத்தில் பீஹாரை இடம் பெறச் செய்துள்ளார்,''என்றார்.பாதுகாப்பான சூழல்இந்திய கிரிக்கெட்டின் 'வைரம்' போன்றவர் வைபவ். இவரை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். வினோத் காம்ப்ளி, பிரித்வி ஷா போல திசைமாறிவிடக்கூடாது. இவரது திறமைக்கு விளம்பர நிறுவனங்கள் கோடிகள் கொடுக்க முன்வரலாம். இது போன்ற கவன சிதறல்களில் இருந்து வைபவை காக்கும் பொறுப்பு ராஜஸ்தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு உண்டு. இந்திய கிரிக்கெட்டின்அடுத்த 'சூப்பர் ஸ்டார்'ஸ்ரீகாந்த்: 14 வயதில், பெரும்பாலான குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள். ஆனால், இளம் வைபவ் துணிச்சலாக சதம் விளாசியுள்ளார். இவரது வயதுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வை பார்த்தோம். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.சச்சின்: சிறப்பாக விளையாடினீர்கள் வைபவ். துணிச்சலான அணுகுமுறை, வேகமாக பேட் சுழற்றியது, சரியான அளவில் பந்தை எதிர்கொண்டது, முழு ஆற்றலை பயன்படுத்தி பந்தை விளாசியதால், 38 பந்தில் 101 ரன் எடுக்க முடிந்தது. யூசுப் பதான்: பிரிமியர் அரங்கில் எனது அதிவேக சத சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள் வைபவ்.யுவராஜ்; உலகின் சிறந்த வீரர்களின் பந்துவீச்சை, கண் இமைக்கும் நேரத்தில் விளாசுகிறார் வைபவ். துணிச்சலாக விளையாடுகிறார். இந்தியாவின் அடுத்த தலைமுறை ஜொலிப்பது பெருமையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V.Mohan
மே 01, 2025 17:43

இந்த சிறுவன் ஜொலிப்பதை பார்த்து இந்தியாவே ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஆனால் பூஸ்ட் போன்ற விளம்பர கம்பெனிகள் இவர்களது மனதை கெடுத்து விளையாட்டையும் கெடுத்து நாசமாக்கி விடுவார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த மாதிரி திறமையானவர்களை பாதுகாக்கவேண்டும். என்னை கேட்டால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மட்டும் விளையாடட்டும். வைபவ் தன திறமையை வளர்த்துக்கொள்ள அனைவரும் உதவவேண்டும்.


Vasan
ஏப் 30, 2025 16:47

Vaibhavs fearless and peerless innings was treat to watch. Reminded of young Sachin of 1989. Wish him all the best, and would like to see him representing India soon.


D.Ambujavalli
ஏப் 30, 2025 06:18

அன்று இந்தச் சிறுவனின் batting ஒரு விருந்தாகவே அமைந்தது மின்னல் வேக ஆட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை