கோப்பை வென்றது அயர்லாந்து: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது
புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அசத்திய அயர்லாந்து அணி, 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.ஜிம்பாப்வே சென்ற அயர்லாந்து அணி, ஒரே ஒரு டெஸ்டில் விளையாடியது. புலவாயோவில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் அயர்லாந்து 260, ஜிம்பாப்வே 267 ரன் எடுத்தன. அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 298 ரன் எடுத்தது. பின், 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே, 4ம் நாள் முடிவில் 183/7 ரன் எடுத்திருந்தது.ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மாதேவெரே (84) ஆறுதல் தந்தார். நியூமன் நியாம்ஹுரி (8), ரிச்சர்ட் கராவா (14) ஏமாற்றினர். ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 228 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. அயர்லாந்து சார்பில் 'சுழலில்' அசத்திய மேத்யூ ஹம்ப்ரேஸ் 6 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை அயர்லாந்தின் ஆன்டி மெக்பிரைன் (90 ரன், 4 விக்கெட்) வென்றார்.
'ஹாட்ரிக்' வெற்றி
அயர்லாந்து அணி, டெஸ்ட் அரங்கில் தனது 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2017ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து, தனது முதல் 7 போட்டியில் தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தானை வென்ற அயர்லாந்து, தற்போது மீண்டும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.