களத்தில் கிரிக்கெட் வீரர் மரணம்
அடிலெய்டு: கடும் வெயில் காரணமாக மைதானத்தில் மரணம் அடைந்தார் ஜுனைல் கான். பாகிஸ்தானை சேர்ந்தவர் ஜுனைல் ஜாபர் கான் 40. கடந்த 2013ல் ஐ.டி., பணிக்காக அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தார். இங்கு கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் அடிலெய்டில் நடந்த போட்டியில் ஓல்டு கன்கார்டியன்ஸ் அணிக்காக களமிறங்கினார். இங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக இருந்தது. அடிலெய்டு கிரிக்கெட் சங்க விதிப்படி, 42 டிகிரி வெப்பம் இருந்தால் போட்டியை ரத்து செய்ய வேண்டும். எனினும் போட்டி நடந்தது. முதலில் 40 ஓவர்கள் பீல்டிங் செய்த ஜுனைல் கான், அடுத்த பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவர் 7 ரன் எடுத்திருந்த போது, வெப்பம் தாங்காமல் மைதானத்தில் சுருண்டு விழுந்து, மரணம் அடைந்தார். ஓல்டு கன்கார்டியன்ஸ் அணி தரப்பில் வெளியிட்ட செய்தியில்,' அணியின் முன்னணி வீரர் ஜுனைல் கான் இறந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. மருத்துவர்கள் முயற்சி எடுத்த போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.