உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 367 ரன் விளாசினார் முல்டர்: தென் ஆப்ரிக்க அணி அபாரம்

367 ரன் விளாசினார் முல்டர்: தென் ஆப்ரிக்க அணி அபாரம்

புலவாயோ: தென் ஆப்ரிக்க கேப்டன் வியான் முல்டர், முச்சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 170 ரன்னுக்கு சுருண்ட ஜிம்பாப்வே 'பாலோ-ஆன்' பெற்றது.ஜிம்பாப்வே சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 465/4 ரன் எடுத்திருந்தது. முல்டர் (264), பிரவிஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் டிவால்ட் பிரவிஸ் (30) நிலைக்கவில்லை. வியான் முல்டர், 297 பந்தில் முச்சதம் எட்டினார். மதிகிமு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய முல்டர், டெஸ்ட் அரங்கில் 350 ரன்னை எடுத்த 7வது வீரரானார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 626/5 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. முல்டர் (367), வெர்ரெய்ன் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி 170 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சீன் வில்லியம்ஸ் (83) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் சுப்ரயென் 4 விக்கெட் சாய்த்தார். 456 ரன் முன்னிலை பெற்ற தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கியது.ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 51/1 ரன் எடுத்து, 405 ரன் பின்தங்கி இருந்தது. தன்னலம் இல்லாத வீரர்டெஸ்ட் அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரர் என்ற சாதனை வெஸ்ட் இண்டீசின் பிரைன் லாரா (400* ரன், எதிர்-இங்கிலாந்து, 2004, ஆன்டிகுவா) வசம் உள்ளது. கடந்த 21 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இச்சாதனையை தகர்க்கும் வாய்ப்பு தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டருக்கு இருந்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 367 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்த இவர், திடீரென 'டிக்ளேர்' செய்தார். தற்காலிக கேப்டனான இவர், இன்னும் 34 ரன் எடுத்திருந்தால் லாராவை முந்தி புதிய வரலாறு படைத்திருக்கலாம். அணியின் நலன் கருதி தன்னலம் இல்லாமல் டிக்ளேர் செய்தார். முல்டரின் இச்செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது, 1998ல் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லரின் செயல்பாடு போல இருந்தது. பெஷாவர் டெஸ்டில் 334 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்த டெய்லர், 'டிக்ளேர்' செய்தார். இதற்கான காரணம் பின்னர் தெரியவந்தது. தனக்கு பிடித்தமான ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் (334 ரன், எதிர்-இங்கி., 1930, லீட்ஸ்) சாதனையை முறியடிக்க விரும்பாததால் இப்படி செய்தார்.ஆம்லாவை முந்தினார்டெஸ்ட் அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில் ஆம்லாவை (311* ரன், எதிர்-இங்கி., 2012, ஓவல்) முந்தி முதலிடம் பிடித்தார் முல்டர்.* ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த சர்வதேச வீரர்கள் வரிசையில் 5வது இடம் பிடித்தார் முல்டர். முதலிடத்தில் லாரா (400*) உள்ளார்.இரண்டாவது இடம்டெஸ்டில் அதிவேக முச்சதம் ('டிரிபிள் செஞ்சுரி') விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் முல்டர் (297 பந்து). முதலிடத்தில் இந்தியாவின் சேவக் (279 பந்து, எதிர்-தெ.ஆப்., 2008, சென்னை) உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி