நாதன் லியான் நீக்கம்: ஆஸி., டெஸ்ட் அணியில் இருந்து
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து நாதன் லியான், லபுசேன் நீக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா செல்லவுள்ள நியூசிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் டிச. 9–13ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 17–21), மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னியில் (2027, ஜன. 4–8) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில், அனுபவ ‘ஸ்பின்னர்’ நாதன் லியான் 39, தேர்வு செய்யப்படவில்லை. இதுவரை 145 டெஸ்டில் (577 விக்கெட்) பங்கேற்ற லியான், கடைசியாக இங்கிலாந்து (5 விக்கெட்), வங்கதேசம் (4), தென் ஆப்ரிக்காவுக்கு (6) எதிரான டெஸ்ட் தொடர்களில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. தென் ஆப்ரிக்க தொடரில் பேட்டிங்கில் ஏமாற்றிய மார்னஸ் லபுசேன் (131 ரன், 3 டெஸ்ட்), கூப்பர் கொனாலி (29 ரன், ஒரு டெஸ்ட்) ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்துவீச்சாளர் கோரி ரோச்சிகியோலி, குயீன்ஸ்லாந்து பேட்டர் ஜாக் கிளேட்டன், அறிமுக வாய்ப்பு பெற்றனர். ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜாக் கிளேட்டன், கேமிரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மைக்கேல் நேசர், மாத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், கோரி ரோச்சிகியோலி.