ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
புலவாயோ: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.ஜிம்பாப்வே சென்ற பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. புலவாயோ நகரில் 3வது போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் சல்மான் ஆகா (32), தயாப் தாகிர் (21), காசிம் அக்ரம் (20), அராபத் மின்ஹாஸ் (22*) ஓரளவு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் பிளெசிங் முசாராபானி 2 விக்கெட் வீழ்த்தினார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு பிரைன் பென்னெட் (43) நம்பிக்கை தந்தார். கேப்டன் சிக்கந்தர் ராஜா (19), மருமணி (15), மபோசா (12*) ஓரளவு கைகொடுக்க, ஜிம்பாப்வே அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் அபாஸ் அப்ரிதி 3 விக்கெட் சாய்த்தார்.