பாகிஸ்தான் அணி அபாரம்: சவுத் ஷகீல் சதம்
ராவல்பிண்டி: சவுத் ஷகீல் சதம் விளாச, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 344 ரன் குவித்தது.பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 267 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 73/3 ரன் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் ஷான் மசூது (26), முகமது ரிஸ்வான் (25) நிலைக்கவில்லை. பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து தடுமாறியது. பின் இணைந்த சவுத் ஷகீல், நோமன் அலி ஜோடி நம்பிக்கை அளித்தது. எட்டாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது நோமன் அலி (45) அவுட்டானார். சவுத் ஷகீல், டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். இவர், 134 ரன் எடுத்து கைகொடுத்தார்.பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 344 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சஜித் கான் (48) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ரேஹன் அகமது 4, சோயப் பஷீர் 3 விக்கெட் வீழ்த்தினர்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் (12), கிராலே (2), போப் (1) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன் எடுத்திருந்தது. ரூட் (5), புரூக் (3) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 2 விக்கெட் சாய்த்தார்.