உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / விலகினார் ராகுல் * தேவ்தத் படிக்கல் வாய்ப்பு

விலகினார் ராகுல் * தேவ்தத் படிக்கல் வாய்ப்பு

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார் ராகுல். தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் பிப். 15ல் ராஜ்கோட்டில் துவங்க உள்ளது. இதற்கான அணியில் இருந்து 'சீனியர்' கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். ராகுல், ஜடேஜா சேர்க்கப்பட்டனர். 'பிட்னஸ்' அடிப்படையில் இருவரும் களமிறங்குவர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. வலது தொடைப் பகுதி காயம் முழுமையாக சரியாகாத நிலையில், மூன்றாவது டெஸ்டில் இருந்து ராகுல் 31, விலகினார்.

திடீர் சந்தேகம்

ஏற்கனவே மோசமான 'பார்ம்' காரணமாக நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், பல்வேறு காயத்துடன் விளையாடியது தெரியவந்தது. இப்போது ராகுல் விலகியதால், இந்திய கிரிக்கெட் போர்டின் மருத்துவ குழு சரியாக செயல்படவில்லையா என சந்தேகம் எழுந்துள்ளது.

பாதிப்பு வருமா

கோலி , ஸ்ரேயாஸ், ராகுல் என முன்னணி வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு சிக்கல் தரலாம். சர்பராஸ் கான் அறிமுக வீரராக ராஜ்கோட்டில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ராகுல் இடத்தில் தேவ்தத் படிக்கல் 23, சேர்க்கப்பட்டுள்ளார்.கேரளாவில் பிறந்த இவர், கர்நாடக ரஞ்சி அணிக்காக விளையாடுகிறார். இந்த சீசனில் இரு சதம் (193, 103) அடித்தார். சமீபத்திய இங்கிலாந்து 'ஏ' தொடரில் 105, 65, 21 ரன் எடுத்தார்.

இஷான் மீது நடவடிக்கையா

இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 25. இந்திய அணியில் இடம் பெற்ற போதும், களமிறங்கும் லெவன் அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியில், தானாக ஓய்வு கேட்டு விலகினார். தற்போது வரை தனது ஜார்க்கண்ட் மாநில அணி நிர்வாகத்தை கூட தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்து ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகி வருகிறார். இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு கோபம் அடைந்தது. இவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில்,'' உலகத் தரமான வீரர் கோலி. களத்தில் துடிப்புடன் செயல்படுவார். இவர் விலகியது டெஸ்ட் தொடருக்கு அவமானம். தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கோலி விலகலால், இளம் வீரர்கள் திறமை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

இங்கிலாந்து வீரர்கள் வருகை

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பின் 10 நாள் ஓய்வுக்காக அபுதாபி சென்றனர். இங்கு கோல்ப் விளையாடி 'ரிலாக்ஸ்' ஆக இருந்தனர். நேற்று இவர்கள், ராஜ்கோட் திரும்பினர். இன்று காலை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்திய வீரர்களும் நேற்று ராஜ்கோட் வந்து சேர்ந்தனர். சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் மட்டும் பயிற்சியில் ஈடுபட்டனர். மற்றவர்களுக்கு ஓய்வு தரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்