சிக்கலில் சாகிப் அல் ஹசன்
தாகா: செக் மோசடி வழக்கில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசனை கைது செய்ய தாகா நீதிமன்றம் 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.வங்கதேச 'ஆல்-ரவுண்டர்' சாகிப் அல் ஹசன் 37, அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பி.,யாக இருந்தார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் விளையாடிய சாகிப், உள்நாட்டு கலவரம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய சாகிப் நாடு திரும்பவில்லை. இங்கிலாந்தில் நடந்த 'கவுன்டி' போட்டியில் பங்கேற்ற சாகிப் 'பவுலிங்' மீது குற்றச்சாட்டு எழுந்ததால், பந்துவீச தடை செய்யப்பட்டுள்ளார்.வங்கதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சாகிப் வழங்கிய இரண்டு செக் 'பவுன்ஸ்' ஆனது. இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதம் வங்கி சார்பில் சாகிப்பிற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கு முறையான பதில் அளிக்காததால் சாகிப் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தாகா நீதிமன்றம், ஜன. 19க்குள் மூவரும் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. நேற்று இருவர் மட்டும் நீதிமன்றத்தில் சரணடைந்து, 'ஜாமின்' பெற்றுக் கொண்டனர்.தற்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படும் சாகிப் அல் ஹசன் மட்டும் ஆஜராகவில்லை. இவரை கைது செய்ய தாகா நீதிமன்றம் 'வாரன்ட்' பிறப்பித்தது. இவர், விரைவில் கைது செய்யப்படலாம்.