சுப்மன் கில்லுக்கு காய்ச்சல்: துலீப் டிராபியில் பங்கேற்பாரா
புதுடில்லி: காய்ச்சலால் அவதிப்படும் சுப்மன் கில், துலீப் டிராபி தொடரில் பங்கேற்பது சந்தேகம்.இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில் 25. சமீபத்தில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சர்வதேச போட்டிகள் இல்லாத நிலையில், இந்திய சீனியர் வீரர்கள் உள்ளூர் போட்டியில் பங்கேற்க வேண்டும் என, பி.சி.சி.ஐ., தெரிவித்திருந்தது. இதனையடுத்து துலீப் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.பெங்களூருவில், வரும் ஆக. 28ல் துவங்கும் துலீப் டிராபி போட்டியில் வடக்கு, கிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், இப்போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. தற்போது சண்டிகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருக்கும் இவர், ஒருவேளை துலீப் டிராபியில் இருந்து விலகினால், கேப்டனாக அங்கித் குமார், மாற்று வீரராக சுபம் ரோஹில்லா அறிவிக்கப்படலாம்.சக வீரர்களுக்கு முன்னுதாரணமாக துலீப் டிராபி போட்டியில் பங்கேற்க சுப்மன் கில் விரும்புகிறார். பி.சி.சி.ஐ., மருத்துவ குழுவினர் இவரை பரிசோதித்து அனுமதி வழங்கும் பட்சத்தில், இப்போட்டியில் களமிறங்கலாம்.