உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஸ்பின் கிங் அஷ்வின் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து

ஸ்பின் கிங் அஷ்வின் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து

பிரிஸ்பேன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தமிழகத்தின் அஷ்வின்.இந்திய அணியின் நட்சத்திர 'ஆப்-ஸ்பின்னர்' அஷ்வின், 38. உலக கோப்பை (2011, 50 ஓவர்), சாம்பியன்ஸ் டிராபி (2013) வென்ற அணியில் இடம் பெற்றவர். 106 டெஸ்டில், 537 விக்கெட் கைப்பற்றினார். சுழற்பந்துவீச்சில் 'கேரம் பால்' போன்ற புதுமைகளை புகுத்தியதால், 'கிரிக்கெட் விஞ்ஞானி' என அழைக்கப்பட்டார். பின் வரிசையில் பேட்டிங்கிலும் கைகொடுத்து, 'ஆல்-ரவுண்டராக' ஜொலித்தார்.தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த விரக்தியில் பிரிஸ்பேன் டெஸ்ட் முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பார். வரும் 2025ல் சென்னை அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவார்.சக வீரர்களுக்கு நன்றி: அஷ்வின் கூறுகையில்,''இந்திய வீரராக, அனைத்துவித கிரிக்கெட்டிலும் இருந்து விடைபெறுகிறேன். என்னிடம் இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் திறமை மீதமுள்ளது. இதை கிளப் அளவிலான உள்ளூர் போட்டியில் வெளிப்படுத்த விரும்புகிறேன். ரோகித் உள்ளிட்ட சக இந்திய வீரர்களுடன் செலவிட்ட தருணங்கள் மறக்க முடியாதவை. எனக்கு வாய்ப்பு அளித்த பி.சி.சி.ஐ.,க்கு நன்றி. ரோகித், கோலி, ரகானே, புஜாரா போன்றோர் துடிப்பாக 'கேட்ச்' பிடித்து, எனக்கு விக்கெட் கிடைக்க உதவினர். இவர்களுக்கும் நன்றி. இது உணர்ச்சிகரமான தருணம் என்பதால், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. என்னை பாராட்டியும், சில நேரங்களில் விமர்சித்தும் எழுதியதற்கு நன்றி,''என்றார்.11 முறைடெஸ்ட் அரங்கில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை இலங்கையின் முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஷ்வின். இருவரும் தலா 11 முறை இவ்விருதை கைப்பற்றினர். அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (9 முறை) உள்ளார்.இரண்டாவது இடம்டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் 2வது இடத்தை ஆஸ்திரேலிய 'சுழல் ஜாம்பவான்' ஷேன் வார்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஷ்வின். இருவரும் தலா 37 முறை இப்படி சாதித்தனர். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (67 முறை) உள்ளார்.முதலிடம்டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 350 விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை இலங்கையின் முரளிதரனுடன் பகிர்ந்து கொண்டார் அஷ்வின். இருவரும் தலா 66 டெஸ்டில், இம்மைல்கல்லை எட்டினர். அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் ஹாட்லீ, தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (தலா 69 டெஸ்ட்) உள்ளனர்.109 'போல்ட்'டெஸ்டில், எதிரணி வீரர்களை அதிக முறை 'போல்டாக்கிய' பவுலர்கள் பட்டியலில் அஷ்வின் 4வது இடம். இவர் 109 முறை இப்படி விக்கெட் சாய்த்தார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் முரளிதரன் (167 'போல்ட்'), இங்கிலாந்தின் ஆண்டர்சன் (137), ஆஸ்திரேலியாவின் வார்ன் (137) உள்ளனர்.537 விக்கெட்டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் அஷ்வின். இதுவரை 106 டெஸ்டில், 537 விக்கெட் கைப்பற்றினார்.ஏழாவது வீரர்டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய சர்வதேச பவுலர்கள் வரிசையில் அஷ்வின் 7வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட், 133 டெஸ்ட்), ஆஸ்திரேலியாவின் வார்ன் (708 விக்கெட், 145 டெஸ்ட்), இங்கிலாந்தின் ஆண்டர்சன் (704 விக்கெட், 188 டெஸ்ட்) உள்ளனர். 'பயோ-டேட்டா'பெயர்: அஷ்வின்பிறந்த நாள்: 17-09-1986பிறந்த இடம்: சென்னைசெல்ல பெயர்: 'ஆஷ்'விளையாட்: கிரிக்கெட்'ரோல்': பவுலிங் 'ஆல்-ரவுண்டர்'பேட்டிங் ஸ்டைல்: வலது கைபவுலிங் ஸ்டைல்: வலது கை 'ஆப்-பிரேக்'சர்வதேச அறிமுகம்: 2010, ஜூன் 5சர்வதேச ஓய்வு: 2024, டிச. 18 மறக்க முடியுமாஅஷ்வினின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத சில தருணங்கள்.* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டில்லி டெஸ்டில் (2011) சுழலில் அசத்திய அஷ்வின், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் சாய்த்தார். அறிமுக டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.* நியூசிலாந்துக்கு எதிரான ஐதராபாத் டெஸ்டில் (2012), 12 விக்கெட் (6+6) சாய்த்த அஷ்வின், முதன்முறையாக ஒரு டெஸ்டில் 10 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார்.* கடந்த 2015ல் வெளியான ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார் அஷ்வின்.* ஐ.சி.சி., உலக கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் அஷ்வின். ஆசிய கோப்பை (2010, 2016) கைப்பற்றிய இந்திய அணியிலும் அஷ்வின் இடம் பெற்றிருந்தார்.* சாம்பியன்ஸ் டிராபி (2013) பைனலில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டன. துல்லிமாக பந்துவீசிய அஷ்வின் 9 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, இந்திய அணி கோப்பை வெல்ல உதவினார்.* கடந்த 2016ல் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் வீரருக்கான ஐ.சி.சி., விருதுகளை அஷ்வின் தட்டிச் சென்றார். கடந்த 2011-2020ல் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய ஐ.சி.சி., டெஸ்ட் கனவு அணியிலும் அஷ்வின் இடம் பிடித்திருந்தார்.* கடந்த 2021ல் நடந்த சிட்னி டெஸ்டில் சகவீரர் ஹனுமன் விஹாரியுடன் இணைந்து 45 ஓவர்களை சமாளித்த அஷ்வின், அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டார்.* டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 250, 300, 500 விக்கெட் சாய்த்த பவுலரானார் அஷ்வின்.* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 100 விக்கெட் சாய்த்த (2022, மார்ச்) முதல் பவுலரானார் அஷ்வின்.* சமீபத்திய அடிலெய்டு டெஸ்டில், ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷை அவுட்டாக்கிய அஷ்வின், டெஸ்ட் (537), சர்வதேச (765) அரங்கில் தனது கடைசி விக்கெட்டை கைப்பற்றினார்.* ஐ.பி.எல்., அரங்கில் 2010, 2011ல் கோப்பை வென்ற சென்னை அணியில் அஷ்வின் இடம் பிடித்திருந்தார்.* 'யூடியூப்' சமூகவலைதளத்தில் அஷ்வினின் 'குட்டி ஸ்டோரீஸ்' சேனல் பிரபலமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ