தமிழக அணி இமாலய வெற்றி: விஜய் ஹசாரே லீக் போட்டியில்
விஜயநகரம்: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 191 ரன் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீர் அணியை வீழ்த்தியது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹராரே டிராபி ('லிஸ்ட் ஏ') 32வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. விஜயநகரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற காஷ்மீர் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.தமிழக அணிக்கு துஷார் ரஹேஜா (7), பிரதோஷ் ரஞ்சன் பால் (7) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய நாராயண் ஜெகதீசன் (165) சதம் கடந்தார். பாபா இந்திரஜித் 78 ரன் விளாசினார். விஜய் சங்கர் (25), முகமது அலி (37*) ஓரளவு கைகொடுத்தனர். தமிழக அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 353 ரன் குவித்தது.கடின இலக்கை விரட்டிய காஷ்மீர் அணிக்கு ஷுபம் கஜுரியா (45), அப்துல் சமத் (25), ஆகிப் நபி (38) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற காஷ்மீர் அணி 36.3 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் அச்யுத் 6, விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை தமிழகத்தின் அச்யுத் வென்றார். தமிழக அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.