சதம் விளாசினார் வைபவ்: யூத் டெஸ்டில் கலக்கல்
சென்னை: 'யூத்' டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன் எடுத்தது.சென்னையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள், இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 293 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 103/0 ரன் எடுத்திருந்தது. விஹான் (21), வைபவ் (81) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் விஹான் மல்கோத்ரா அரைசதம் கடந்தார். வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 133 ரன் சேர்த்த போது வைபவ் (104) 'ரன் அவுட்' ஆனார். விஹான் (76) நம்பிக்கை தந்தார். நித்ய பாண்ட்யா (9), கார்த்திகேயா (0) ஏமாற்றினர். கேப்டன் சோஹம் பட்வர்தன் (33), அபிக்யன் குண்டு (32), நிகில் குமார் (20) ஓரளவு கைகொடுத்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் விஷ்வா ராம்குமார் 4, தாமஸ் பிரவுன் 3 விக்கெட் சாய்த்தனர்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ரிலே கிங்செல் (48), ஆலிவர் பீக் (32) நம்பிக்கை தந்தனர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 110/4 ரன் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் முகமது ஏனான் 2 விக்கெட் கைப்பற்றினார்.
58 பந்தில்...
அபாரமாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி, 58 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் 'யூத்' டெஸ்டில் (19 வயது) அதிவேக சதம் விளாசிய இந்திய வீரரானார். இதற்கு முன் இந்தியாவின் அதர்வா, 89 பந்தில் (2018, எதிர்: இலங்கை, 2018, இடம்: அம்பாந்தோட்டை) சதமடித்திருந்தார். * இச்சாதனை படைத்த சர்வதேச வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் வைபவ் 13. முதலிடத்தில் இங்கிலாந்தின் மொயீன் அலி (56 பந்து, 2005, எதிர்: இலங்கை, இடம்: லீட்ஸ்) உள்ளார்.