உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / யாஷ் துல் இதயத்தில் என்ன: ஆப்பரேஷன் பின்னணி

யாஷ் துல் இதயத்தில் என்ன: ஆப்பரேஷன் பின்னணி

புதுடில்லி: இளம் வீரர் யாஷ் துல் இதயத்தில் ஓட்டை கண்டறியப்பட, சிறிய 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.டில்லியை சேர்ந்தவர் யாஷ் துல், 21. கடந்த 2022ல் நடந்த உலக கோப்பை தொடரில் (19 வயதுக்கு உட்பட்ட) இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய இவர், கோப்பை வென்று தந்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடினார். தற்போதைய டில்லி பிரிமியர் லீக் தொடரில் சென்ட்ரல் டில்லி கிங்ஸ் அணிக்காக பங்கேற்கிறார். 5 இன்னிங்சில் 93 ரன் தான் (ஸ்டிரைக் ரேட் 113.41) எடுத்தார். 'டாப்-ஆர்டர்' பேட்டரான இவர் சோபிக்காததற்கு, இதயத்தில் ஏற்பட்ட ஓட்டை அல்லது சிறிய துளையே காரணம்.பிறவியில் குறை: மனித இதயத்தில் 4 அறைகள் உள்ளன (மேலே 2 ஆட்ரியம், கீழே 2 வென்ட்ரிக்கிள்). இந்த அறைகளைப் பிரிக்கும் மெல்லிய சுவரில் (செப்டம்), சிலருக்கு பிறவியிலேயே ஓட்டை இருக்கும். இரண்டு வயதில் தானாகவே மூடிக்கொள்ளும். சிலருக்கு ஓட்டை மூடிக்கொள்ளாத போது, ரத்தத்தில் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்காது. இதயத்தில் சீரான ரத்த ஓட்டம் இருக்காது. மூச்சுத்திணறல், சோர்வு உட்பட பல பாதிப்புகள் ஏற்படும். அப்போது 'ஆப்பரேஷன்' செய்ய நேரிடும். சிலருக்கு எவ்வித அறிகுறியும் தெரியாது. முறையாக உடற்பரிசோதனை செய்தால் மட்டுமே, முன்கூட்டியே பிரச்னையை கண்டறிய முடியும். யாஷை பொறுத்தவரை ஜூனியர் உலக கோப்பை தொடரில் இதய பாதிப்புடன் தான் விளையாடி இருக்கிறார். கடந்த ஆண்டு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றார். அங்கு நடந்த வழக்கமான 'ஸ்கேன்' பரிசோதனையில் தான், இவரது இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. பி.சி.சி.ஐ., அறிவுறுத்தலின்படி டில்லி மருத்துவமனை ஒன்றில் கடந்த ஜூலையில் 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார்.தளராத நம்பிக்கை: யாஷ் துல் பயிற்சியாளர் ராஜேஷ் நாகர் கூறுகையில்,''சிறிய 'ஆப்பரேஷன்' தான் நடந்தது. 10-15 நாளில் யாஷ் மீண்டு விட்டார். 80 சதவீத உடற்தகுதியுடன் உள்ளார்,'' என்றார்.யாஷ் துல் கூறுகையில்,''இதய பாதிப்பில் இருந்து மீண்டு விட்டேன். போட்டிகளில் பிரகாசிக்க, சிறிது காலம் தேவைப்படும். கிரிக்கெட்டில் நுாறு சதவீத திறமை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி