மும்பை: இந்திய டெஸ்ட் அணி பெரும் மாற்றத்தை நோக்கி நகர்கிறது. அனுபவ ரோகித் சர்மா, விராத் கோலி, அஷ்வினின் ஓய்வு தாக்கத்தை ஏற்படுத்தலாம். இளம் வீரரான தமிழகத்தின் சாய் சுதர்சன் அறிமுகமாகலாம்.இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்தவர் ரோகித் சர்மா 38. கடந்த 8 டெஸ்டில் 164 ரன் (சராசரி 10.93) தான் எடுத்தார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்தார். இவரை நீக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது. அதற்குள் முந்திக் கொண்ட ரோகித், தானாகவே டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 'சீனியர்' கோலியும் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார். சுதர்சன் வாய்ப்பு: இரு முக்கிய பேட்டர்கள் இல்லாமல், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20-ஆக.4) இந்திய அணி களமிறங்க உள்ளது. இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான ஆரம்பம் என்பதால், அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ரோகித் சர்மாவுக்கு பதில் சாய் சுதர்சன் 23, வாய்ப்பு பெறலாம். தற்போதைய பிரிமியர் தொடரில் குஜராத் அணியின் துவக்க வீரராக அசத்தும் இவர், 509 ரன் (11 போட்டி) குவித்துள்ளார். ஏற்கனவே சர்ரே கவுன்டி அணிக்காக விளையாடியுள்ளார். இதனால் இங்கிலாந்து சூழ்நிலை தெரியும். தவிர, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் ஆதரவு உண்டு. இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், சுதர்சன் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசலாம். 4வது இடத்தில் ராகுல்: டெஸ்ட் பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வால், சுதர்சன் துவக்கத்தில் வரலாம். 3வது வீரராக சுப்மன் கில் களமிறக்கப்படலாம். கோலிக்கு பதில் நான்காவது இடத்தில் கே.எல்.ராகுல் வர வாய்ப்பு உண்டு. 'மிடில் ஆர்டரில்' கீப்பர்-பேட்டர்களான ரிஷாப் பன்ட், துருவ் ஜூரல், கருண் நாயர், ஷ்ரேயஸ், தேவ்தத் படிக்கல் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். 'ஆல்-ரவுண்டராக' ரவிந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். அஷ்வின் இல்லாத நிலையில், குல்தீப் மீதான சுமை அதிகரிக்கும். இங்கிலாந்து மண்ணில் 5 'வேகங்கள்' தேவைப்படலாம். பும்ரா, சிராஜ், ஷமி, ஆகாஷ் தீப், முகேஷ் குமார் இடம் பெறலாம். லாரா வலியுறுத்தல்கேப்டன் பதவி தராததால் தான், ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறார் கோலி. இவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது. பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''இங்கிலாந்து தொடரில் கேப்டனாக கோலியை நியமிக்க முடிவு செய்தோம். இவரிடம் இருந்து தலைமைபண்பு பற்றி இளம் சுப்மன் கற்றுக் கொள்ளலாம். பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கவில்லை. ஓய்வு முடிவில் கோலி உறுதியாக இருந்தால், புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படலாம்,''என்றார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா கூறுகையில்,''டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கோலி தேவை. இவர், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற போவதில்லை. எஞ்சிய டெஸ்ட் வாழ்க்கையில் சராசரியாக 60 ரன்னுக்கும் மேல் எடுப்பார்,'' என்றார்.