தென் ஆப்ரிக்கா ஹாட்ரிக் வெற்றி * வங்கதேச பெண்கள் ஏமாற்றம்
விசாகப்பட்டனம்: உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க பெண்கள் அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கையில் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நேற்று, விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. ஷொர்னா அரைசதம்வங்கதேச அணிக்கு பர்கானா (30), ருபையா (25) ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன் எடுத்தார். ஷர்மின் 77 பந்தில் 50 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த 18 வயது ஷொர்னா, வேகமாக ரன் சேர்த்தார். 35 பந்தில் அரைசதம் கடந்தார். வங்கதேச பெண்கள் ஒருநாள் அரங்கில் அதிவேக அரைசதம் இது ஆனது. மற்றவர்கள் ஏமாற்ற வங்கதேச அணி 50 ஓவரில் 232/6 ரன் மட்டும் எடுத்தது. ஷொர்னா (51), ரிது (19) அவுட்டாகாமல் இருந்தனர். எளிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தஸ்மின், ஒரே பந்தில் 'டக்' அவுட்டானார். கேப்டனா லாரா, அன்னெகே இணைந்து அணியை மீட்க போராடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த போது, லாரா (31) ரன் அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் அன்னெகே (28), அன்னெரியே (2), சினாலோ (4) கிளம்பினர். பின் இணைந்த காப் (56), டிரையான் (62) என இருவரும் அரைசதம் அடிக்க, வெற்றி எளிதானது. தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 235/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் என தொடர்ந்து மூன்று அணிகளை வென்ற தென் ஆப்ரிக்கா, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.