பைனல் கனவில் இங்கிலாந்து * இன்று தென் ஆப்ரிக்காவுடன் பலப்பரீட்சை
கவுகாத்தி: இந்தியா, இலங்கையில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) நடக்கிறது. இதன் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா (13 புள்ளி), இங்கிலாந்து (11), தென் ஆப்ரிக்கா (10), இந்திய (7) அணிகள் முன்னேறின.இன்று கவுகாத்தியில் நடக்கும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 7 போட்டியில் 5 ல் (1 தோல்வி, 1 முடிவில்லை) வென்றது. பேட்டிங்கில் கேப்டன் ஹீதர் நைட் (288 ரன்), அமி ஜோன்ஸ் (220), டாமி (210) உள்ளிட்டோர் கைகொடுக்கின்றனர். பவுலிங்கில் 'சீனியர்' சோபி, லின்சே தலா 12 விக்கெட் சாய்த்து மிரட்டுகின்றனர். ஆல் ரவுண்டர் நாட் சிவரும் (192 ரன், 8 விக்.,) பெரும் பலம்.நான்கு முறை சாம்பியன் ஆன இங்கிலாந்து, இன்று அசத்தினால் 9வது முறையாக பைனலுக்கு முன்னேறலாம். தென் ஆப்ரிக்க அணி 7 போட்டியில் 5ல் வென்றது. முதல், கடைசி போட்டியில் தோற்றது. இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 69 ரன்னில் சுருண்டது. கேப்டன் லாரா (301 ரன்), டி கிளார்க் (178) கைகொடுத்தாலும் மற்றவர்கள், சுழலில் திணறுவது பலவீனம். பவுலிங்கில் மிலபா (11), காப் (7) தவிர மற்றவர்கள் ஏமாற்றுகின்றனர். உலக கோப்பை தொடரில் மூன்று 4வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்கா (2000, 2017, 2022, 2025), இன்று வென்றால், முதன் முறையாக பைனலுக்கு செல்லலாம்.