| ADDED : ஜூன் 30, 2024 11:28 PM
மயாமி: 'கோபா அமெரிக்கா' கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என பெருவை வீழ்த்தியது. 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது.அமெரிக்காவில், 'கோபா அமெரிக்க' கால்பந்து 48வது சீசன் நடக்கிறது. மயாமியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. காலில் ஏற்பட்ட காயத்தால் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சி, இப்போட்டியில் விளையாடவில்லை. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அர்ஜென்டினாவுக்கு லாடரோ மார்டினஸ் (47, 86வது நிமிடம்) கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் கனடா, சிலியை வீழ்த்திய அர்ஜென்டினா 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது.ஆர்லாண்டோவில் நடந்த மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் கனடா, சிலி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. 'ஏ' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த அர்ஜென்டினா (9 புள்ளி), கனடா (4) காலிறுதிக்கு முன்னேறின.