| ADDED : ஜூலை 01, 2024 11:11 PM
டெக்சாஸ்: கோபா கால்பந்து தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற வெனிசுலா அணி, காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. நேற்று டெக்சாசில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில்உலகத்தரவரிசையில் 54வது இடத்திலுள்ள வெனிசுலா அணி, 53வது இடத்திலுள்ள ஜமைக்காவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இரண்டாவது பாதியில் வெனிசுலா வீரர் பெல்லோ, 49வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 56 நிமிடம் வெனிசுலா வீரர் ஹெரேரா பந்தை சக வீரர் ரான்டனிடம் அனுப்பினார். இதை அப்படியே கோலாக மாற்றினார் ராண்டன். 85 நிமிடத்தில் மீண்டும் அசத்தியது வெனிசுலா. இம்முறை ரான்டிரேடு கைகொடுக்க, ராமிரெஸ் கோல் அடித்தார். முடிவில் வெனிசுலா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஈகுவடார், மெக்சிகோவை வீழ்த்திய வெனிசுலா, இத்தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. 9 புள்ளியுடன் காலிறுதிக்கு முன்னேறியது. ஈகுவடார் 'டிரா''பி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஈகுவடார், மெக்சிகோ அணிகள் மோதின. இதில் குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வென்றால் காலிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் மெக்சிகோ போராடியது. ஆனால் போட்டி கோல் எதுவும் இல்லாமல் (0-0) 'டிரா' ஆனது. இரு அணியும் தலா 1 வெற்றி, 1 'டிரா', 1 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றன. இருப்பினும் கோல் அடிப்படையில் முந்திய ஈகுவடார் அணி, காலிறுதிக்கு முன்னேறியது.