| ADDED : ஜூன் 15, 2024 11:55 PM
முனிக்: 'யூரோ' கோப்பை தொடரை ஜெர்மனி அணி அமர்க்களமாக துவக்கியது. முதல் லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.ஐரோப்பிய அணிகள் மோதும் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடக்கிறது. முனிக்கில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி, ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.சொந்த மண்ணில் அசத்திய ஜெர்மனி அணி, கோல் மழை பொழிந்தது. இளம் வீரர்களான புளோரியன் விர்ட்ஸ் (10வது நிமிடம்), ஜமால் முசியாலா (19) தலா ஒரு கோல் அடிக்க, 2-0 என முன்னிலை பெற்றது.
'ரெட் கார்டு' பெற்ற வீரர்
பின் 'பெனால்டி ஏரியா'வில் வைத்து ஜெர்மனியின் கன்டோகனை முரட்டுத்தனமாக மடக்கினார் ஸ்காட்லாந்து தற்காப்பு பகுதி வீரர் ரியான் போர்டியஸ். இந்த சம்பவத்தை 'வார்' தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தனர். இதில் தவறு உறுதி செய்யப்பட 'ரெட் கார்டு' காட்டி போர்டியஸ் வெளியேற்றப்பட்டார். இதற்கான 'பெனால்டி' வாய்ப்பில் கெய் ஹாவர்ட்ஸ் (45+1) கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் ஜெர்மனி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. போர்டியஸ் இல்லாததால், 10 பேருடன் விளையாடிய ஸ்காட்லாந்து தடுமாறியது. இதை பயன்படுத்திய ஜெர்மனியின் நிக்கோலஸ் புல்கிரக் (68) ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் பதட்டப்பட்ட ஜெர்மனியின் அன்டோனியோ ருடிகர் 'சேம் சைடு கோல்' அடித்தார். இது, ஸ்காட்லாந்து ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. கடைசி 'ஸ்டாபேஜ்' நேரத்தில் எம்ரி கேன் (90+3) ஒரு கோல் அடிக்க, ஜெர்மனி 5-1 என்ற கணக்கில் கலக்கல் வெற்றி பெற்றது.
சுவிட்சர்லாந்து அபாரம்
மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி, ஹங்கேரியை 3-1 என வீழ்த்தியது. சுவிட்சர்லாந்து சார்பில் குவாட்வோ டுவா (12), மிச்சல் அபிச்சர் (45), எம்போலா (90+3) தலா ஒரு கோல் அடித்தனர். ஹங்கேரிக்கு பர்னபாஸ் வர்கா (66) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.